ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது ஒன்றரை வருடத்தை தாண்டியும் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
இந்த போர் இத்தனை மாதம் கடந்தும் இவ்வளவும் நாட்கள் தொடர உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் அளித்துவரும் பொருளாதார மற்றும் ஆயுத உதவி முக்கிய காரணமாக இருந்து வருகிறது. தற்போது வரை அமெரிக்கா உக்ரைனுக்கு பல பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுத, பொருளாதார உதவிகளை செய்துள்ளது.
இந்த நிலையில், உக்ரைனுக்கு அளிக்கப்பட்டு வரும் நிதியை குறைக்கவேண்டும் என தற்போது குரல்கள் எழுந்து வருகிறது. Pew Research Center என்ற அமைப்பு அமெரிக்க மக்களிடையே உக்ரைனுக்கு அமெரிக்கா அளிக்கும் உதவிகளை குறித்து கருத்துக் கணிப்பு நடத்தியது.
இந்த ஆய்வில், 30 சதவீதத்திற்கும் அதிகமான அமெரிக்கர்கள் உக்ரைனுக்கான உதவியை குறைப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், 29 சதவீத அமெரிக்கர்கள் தற்போது வழங்கப்படும் நிதியுதவி போதுமானது என்றும், 18 சதவீத அமெரிக்கர்கள் உக்ரைனுக்கு வழங்கப்படும் நிதியுதவியை அதிகரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதில் 23 சதவீதம் பேர் எந்த கருத்தையும் கொண்டிருக்கவில்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.