நியூயார்க் நகரில் வண்டியில் ஹலால் விற்பனை செய்யும் உணவு கடை ஒன்று உள்ளது. இங்கு வந்த ஸ்டூவர்ட் செல்டோவிட்ஸ் என்பவர் இந்த கடையில் பணியாற்றும் எகிப்தியர் ஒருவரிடம் காசா மீதான இஸ்ரேலின் போரைப் பற்றிப் பேசியுள்ளார்.
அப்போது அவர், "நாங்கள் 4000 பாலஸ்தீனிய குழந்தைகளைக் கொன்றால் அது போதாது" என இஸ்ரேல் போரை ஆதரித்து வெறுப்பைப் பரப்பும் வகையில் வாக்குவாதம் செய்துள்ளார். மேலும் அந்த பணியாளரைப் பார்த்து "நீங்கள் ஒருபயங்கரவாதி, நீங்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கிறீர்கள்" என ஆவேசமாகக் கூறியுள்ளார்.
இது குறித்து ஹலால் உணவு கடையின் உரிமையாளர் இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது போலிஸார் விசாரித்தபோதுதான், அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த போது அவருக்கு உதவியாளராக இருந்த ஸ்டூவர்ட் செல்டோவிட்ஸ்தான் பாலஸ்தீன் - இஸ்ரேல் போர் குறித்து வாக்குவாதம் செய்தது என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலிஸார் மோசமான துன்புறுத்தல், வெறுக்கத்தக்கக் குற்றங்களைப் பின்தொடர்தல், பயத்தை ஏற்படுத்துதல் மற்றும் வேலை செய்யும் இடத்தில் பின்தொடர்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் ஸ்டூவர்ட் செல்டோவிட்ஸை கைது செய்தனர்.
முன்னாள் அதிபர் பராக் ஒபாமா நிர்வாகத்தின் கீழ் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் தெற்காசிய இயக்குநரகத்தின் செயல் இயக்குநராக செல்டோவிட்ஸ் பணியாற்றினார். மேலும் அவர் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை அலுவலகத்தில் மூத்த அரசியல் அதிகாரியாகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.