கஜகஸ்தான் நாட்டில் மிகப்பெரிய நகரங்களில் ஒன்று அல்மாட்டி. இங்கு உள்ள16 மாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அடுக்குமாடி முழுவதும் பற்றி எரிந்துள்ளது.
இந்த பயங்கர தீ விபத்து பற்றி அறிந்த உடனே தீயணைப்புத்துறையினர் விரைந்துவந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால் சிலர் அச்சத்தால் வீட்டின் ஜன்னல்கள் வழியாகக் கீழே குதித்துள்ளனர்.
மேலும் சிலர் தங்களது குழந்தைகளைக் கீழே தூக்கி வீசியுள்ளனர். அப்போது கீழே இருந்த பொதுமக்கள் மெத்தைகள் மற்றும் போர்வைகளைக் கொண்டு அவர்களைக் காப்பாற்றியுள்ளனர். 300க்கும் மேற்பட்டவர்களைத் தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டுள்ளனர்.
மேலும் 16 குழந்தைகள் உட்பட 31 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என தெரியவந்துள்ளது.
இந்த விபத்திற்குக் காரணம் 5வது மற்றும் 6வது தளத்திற்கு இடையே லிப்ட்டின் கேபிள்கள் தீப்பிடித்து அடுக்குமாடி முழுவதும் பரவியுள்ளது. இந்த மீட்பு சம்பவம் தொடர்பான திகிலூட்டும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியுள்ளது.