அர்ஜென்டினாவை சேர்ந்த பெர்னாண்டோ பெரெஸ் அல்காபா என்பவர் கிரிப்டோகரன்சி மூலம் பல கோடிகளை சம்பாதித்துள்ளார். அதன் மூலம் ஏராளமான விடுதிகளை வாங்கி அதனை வாடகைக்கு விட்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், அவர் கடந்த ஒரு வாரமாக காணாமல் போயுள்ளார். இதன் காரணமாக காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் உள்ள ஒரு நீர்நிலைக்கு அருகே ஒரு சூட்கேஸ் இருந்துள்ளது. அதில் மனித உடல்பாகங்கள் இருந்ததால் இது குறித்து காவல்துறைக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அதனை சோதனை செய்த போலிஸார் அந்த உடல்பாகத்தில் இருந்த டாட்டுவை வைத்து அது காணாமல் போன பெர்னாண்டோ பெரெஸ் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரின் உடல்பாகங்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில், உடலைத் துண்டு துண்டாக வெட்டும் முன்பு அவரது தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது தெரியவந்தது. இதனால் அவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் என போலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் கொலையாளி யார் என்பது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீப காலமாக கிரிப்டோகரன்சியின் விலை சர்வதேச அளவில் வீழ்ச்சியை சந்தித்ததாகவும், இதனால் பாதிக்கப்பட்ட பெர்னாண்டோ பெரெஸ் பலரிடம் கடன் வாங்கியதாகவும், இதனை திரும்ப கொடுக்காததால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் போலிஸார் கூறியுள்ளனர்.