பொதுவாக காதலர்கள் தங்கள் துணைவர்களை இழந்து விட கூடாது என்பதற்காக சில விஷயங்களை செய்வது உண்டு. பெற்றோர்களை விட்டு வருவது, நண்பர்களை விட்டு பிரிவது என்று பல விஷயங்களை செய்வது உண்டு. சிலர் நாடு விட்டு, கண்டம் விட்டு, கடல் தாண்டி தனது காதலரை சந்திக்க செல்வர். இதற்கு ஒரு கட்டத்தை தாண்டி, சில காதலர்கள் தங்கள் காதலிக்கு விலை உயர்ந்த பொருட்களை பரிசாக வழங்க வேண்டும் என்பதற்காக திருடி மாட்டிக்கொள்வதும் உண்டு.
அப்படி ஒரு வினோத நிகழ்வு தான் தற்போது சீனாவில் நடந்துள்ளது. காதலன் தன்னை விட்டு பிரியக்கூடாது என்பதால், காதலி சூனியம் வைப்பதற்காக அவரது அலுவலகத்தில் பணம் திருடி மாட்டி கொண்ட நிகழ்வு அனைவர் மத்தியிலும் பேசு பொருளாக மாறியுள்ளது.
வடகிழக்கு சீனாவில் அமைந்துள்ளது லியோனிங் என்ற மாகாணம். இங்கு வாங் (Wang) என்ற குடும்ப பெயர் கொண்ட பெண் ஒருவர் வசித்து வருகிறார். 24 வயது பெண்ணான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளாராக பணியாற்றி வந்துள்ளார். இந்த சூழலில் இவர் காதலித்தும் வந்துள்ளார். ஆனால் காதலர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் சண்டையை தீர்ப்பது குறித்து இணையத்தில் தேடி வந்துள்ளார். அப்போது இவருக்கு ஜாதகம், ஜோசியம், மந்திரம் உள்ளிட்டவையை குறித்து தெரியவந்துள்ளது. இதனால் அவர் சூனியம் வைக்கும் மந்திரவாதி ஒருவரை நாடியுள்ளார். அவரோ மில்லியன் கணக்கில் பணம் கேட்டதால், வேறு வழியின்றி தனது நிறுவனத்தில் இருந்து கையாடல் செய்துள்ளார் வாங்.
இதையடுத்து அவர் வேறு ஒரு சாமியாரிடம் அழைத்து செல்லவே, அவர் வாங்குக்கு மந்திரம் போட்டு சிலவற்றை கொடுத்துள்ளார். இவ்வாறாக வாங்கிடம் இருந்து சுமார் 4.8 மில்லியன் யுவான்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.5 கோடி) 100-க்கும் மேற்பட்ட முறையாக பெற்றுள்ளார் அந்த மந்திரவாதி. மேலும் தனது நிறுவனத்தில் கையாடல் செய்த பணம் மூலம் வாங், தனக்கு என்று பிராண்டட் ஹாண்ட் பேக், ஆடைகள் என வாங்கியுள்ளார்.
இந்த நிலையில், கியாவோ (Qiao) என்ற குடும்பப்பெயர் கொண்ட வாங்கின் முதலாளி தனது அலுவலகத்தில் இருந்து பணம் காணாமல் போனதும், அதனை வாங் தான் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விசாரணை மேற்கொள்ளும்போது, வாங், தனது நிறுவனத்தில் இருந்து கடந்த 2018 மார்ச் மாதத்தில் இருந்தே பணத்தை சிறுக சிறுக கையாடல் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இருப்பினும் தான் செய்த குற்றம் குறித்து வாங் வருத்தப்படவில்லை. மாறாக தந்து காதலனுக்காக தான் செய்தது தவறு இல்லை என்று, அது முறையற்ற அளவில் தான் செலவழிக்கவில்லை என்றும், இந்த சூழலிலும் தனது காதலன் தன்னை விட்டு செல்லவில்லை என்றும் கூறினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.