மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதலீடோடு OPEN AI என்ற மென்பொருள் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் Chat GPT-யின் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை அறிமுகம் செய்தது. அதில் இருந்து இணையஉலகம் Chat GPT-யை பற்றியே தொடர்ந்து பேசி வருகிறது.
Chat GPT மென்பொருள் செயற்கை ரோபோ போல செயல்படும் ஒரு அமைப்பாகும். இதனால் நமது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும், நம்முடன் உரையாட முடியும், இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நமது தேவைகளுக்கு ஏற்ப அனைத்து பதில்களையும் Chat GPT-யால் தரமுடியும். அதிலும் கல்வி நிலைய பயன்பாடுகளில் கடிதம் முதல் கட்டுரை வரை அனைத்தையும் இதனால் செய்யமுடியும்.
சுமார் 100 மொழிகளில் Chat GPT மென்பொருள் தற்போது கிடைக்கிறது என்றாலும் ஆங்கிலம் தவிர பிற மொழிகளில் இதன் திறன் சிறப்பாக இல்லை என்றும் கூறப்படுகிறது. அதேநேரம் கூகிள் போன்ற பல்வேறு நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவு குறித்த ஆய்வில் இறங்கியுள்ளதால் விரையில் அதன் தரம் பெரிய அளவில் உருவாகும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவின் தந்தையாகக் கருதப்படும் ஜெஃப்ரி ஹின்டன் செயற்கை நுண்ணறிவு குறித்து அச்சம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், செயற்கை நுண்ணறி தற்போதைய நிலையில் மனிதர்களை விட புத்திசாலிகளாக இல்லாவிட்டாலும், விரைவில் அவை நம்மை விட புத்திசாலிகளாக மாறும்.
தற்போதைய நிலையில் GPT-4 போன்ற செயற்கை மென்பொருள்கள் மனிதனை மிஞ்சும் பொது அறிவுடன் உள்ளன. தற்போது அவற்றிடம் மனிதர்களுக்கு இருக்குமளவுக்குப் பகுத்தறிவு இல்லாவிட்டாலும் தற்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கும் முன்னேற்றம் காரணமாக விரைவில் அந்த மென்பொருள்கள் போதுமான பகுத்தறிவைப் பெற்றுவிடும். அப்போது அவற்றை பற்றி நாம் கவலைப்படவேண்டியிருக்கும்" என்று கூறியுள்ளார்.