மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதலீடோடு OPEN AI என்ற மென்பொருள் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் ChatGPT-யின் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை அறிமுகம் செய்தது. அதில் இருந்து இணையஉலகம் ChatGPT-யை பற்றியே தொடர்ந்து பேசி வருகிறது.
ChatGPT மென்பொருள் செயற்கை ரோபோ போல செயல்படும் ஒரு அமைப்பாகும். இதனால் நமது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும், நம்முடன் உரையாட முடியும், இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நமது தேவைகளுக்கு ஏற்ப அனைத்து பதில்களையும் ChatGPT-யால் தரமுடியும். அதிலும் கல்வி நிலைய பயன்பாடுகளில் கடிதம் முதல் கட்டுரை வரை அனைத்தையும் இதனால் செய்யமுடியும்.
சுமார் 100 மொழிகளில் ChatGPT மென்பொருள் தற்போது கிடைக்கிறது என்றாலும் ஆங்கிலம் தவிர பிற மொழிகளில் இதன் திறன் சிறப்பாக இல்லை என்றும் கூறப்படுகிறது. அதேநேரம் ChatGPT மென்பொருளை தனது தேடுதல் பொறியான BING-ல் இணைத்து லாபம் ஈட்ட மைக்ரோசாப்ட் முயற்சித்து அதற்கான செயலில் இறங்கியுள்ளது. இந்த தொழில்நுட்பம் வந்தபிறகு இது தேடுதல் வலைத்தளமாக உலகளவில் ஆதிக்கம் செல்லும் கூகுள் நிறுவனத்துக்கு பெரும் சவாலாக உருவெடுக்கும் என கணிக்கப்பட்டது.
இதன் காரணமாக இதற்கு போட்டி செயலியை உருவாக்க கூகுள் நிறுவனம் முயன்று தற்போது 'Bard' எனப் பெயரிடப்பட்டிருக்கும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து சமீபத்தில் பேசிய உலக பணக்காரரான எலான் மஸ்க் ChatGPT-யின் சேவையை இலவசமாக வழங்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். ஆனால் அதில் அதிக லாபம் ஈட்ட மைக்ரோசாப்ட் திட்டமிட்டுள்ளது என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது ChatGPTக்குப் போட்டியாக TruthGPT எனும் AI செயலியை உருவாக்கவுள்ளதாக எலான் மஸ்க் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர், " விரைவில் TruthGPT AI செயலியை உருவாக்கவிருக்கிறேன். இது அனைத்தையும் சரியாகப் புரிந்துகொள்ளும் தன்மை கொண்டதாக இருக்கும். . இதனால் எந்தவித ஆபத்தும் இருக்காது, நிச்சயம் பாதுகாப்பானதாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.