உலகளவில் சில நாடுகளில் இப்போதும் கூட எதிரிகள் திடீர் தாக்குதல் நடத்துகின்றனர். அந்நாட்டு அரசுக்கு எதிராக சில இயக்கங்கள் இதுபோன்ற தாக்குதலில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக இதுபோன்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் பாக்கிஸ்தான், ஆப்கனிஸ்தான் நாடுகளில் அநேகமாக நிகழ்கின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கூட ஆப்கான் நாட்டில் மசூதி மீது குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த கோர தாக்குதலில் குழந்தைகள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியானர். அதில் பலரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் தற்போது பாகிஸ்தானில் தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தியதில் பலரும் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் பெஷாவர் நகரில் உள்ள மசூதி ஒன்றில் நேற்று வழக்கம்போல் அந்த பகுதி மக்கள் தொழுகை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த தற்கொலை படையினர் திடீரென தனது உடலில் கட்டி வந்த வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளனர்.
பயங்கர சப்தத்துடன் குண்டு வெடித்ததில் மசூதி கட்டிடத்தின் ஒரு பகுதி முற்றிலுமாக இடிந்து தரைமட்டமானது. இந்த குண்டு வெடிப்பு தாக்குதல் அந்த பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தொடர்ந்து இந்த வெடிகுண்டு தாக்குதலில் முதலில் 25 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 25-ல் இருந்து 70 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த குண்டு வெடிப்பில் கட்டிடடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலரும் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி உள்ளதால் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பலியானோர் எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. அதோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் பலரும் கவலைக்கிடமாக உள்ளனர்.
இந்த வெடிகுண்டு தாக்குதல் பாகிஸ்தானில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதலுக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்ததோடு மட்டுமின்றி, உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.