ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வந்த அரசை வீழ்த்தி தற்போது அங்கு தாலிபான் ஆட்சி நடைபெற்று வருகிறது. தாலிபான் ஆட்சிக்கு வந்ததும் அங்குள்ள மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் பெண்களுக்கு உண்டான உரிமைகளும் பறிக்கப்பட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது.
அதோடு அங்கு தாலிபனுக்கு எதிரான அமைப்புகள் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டு வருவதால் அங்கு தொடர்ந்து பதற்ற நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கு இடையே எல்லை பிரச்னைகள், பயங்கரவாதம் தொடர்பாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், தாலிபான் ஆளும் ஆப்கானிஸ்தான் தற்போது ஒரு சூப்பர் காரை வடிவமைத்துள்ளது உலகளவில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானை சேர்ந்த பொறியாளரான முஹம்மது ரஸா அஹ்மதி என்பவர் இந்த சூப்பர் காரை வடிவமைத்துள்ளார்.
தாலிபான்கள் ஆட்சிக்கு வரும் முன்னரே இந்த பணி தொடங்கப்பட்டாலும் தற்போதே இதற்கான இறுதிப்பணிகள் முடிவடைந்து தாலிபான் ஆட்சியில் இந்த கார் வடிவமைப்பு முழுவதுமாக முடிவுக்கு வந்துள்ளது. இந்த காரை தயாரிக்கும் பணியில் 10 முதல் 12 பேர் கொண்ட குழு ஈடுபட்டதாகவும் டொயோட்டா இன்ஜின் இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த காரை தயாரிக்கை 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் டாலர் வரை செலவாகியதாகவும் பொறியாளர் முஹம்மது ரஸா அஹ்மதி கூறியுள்ளார். இந்த ஆண்டு கத்தாரில் நடைபெறவுள்ள வாகனக் கண்காட்சியில் இந்த வாகனத்தையும் பங்கெடுக்க வைக்க தாலிபான் அரசு முயல்வதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ள நிலையில், பலரும் அந்த பொறியாளரை பாராட்டி வருகின்றனர்.