பொதுவாக நம் வீடுகளில் விலங்குகள், பறவைகள், பூச்சிகள் தொந்தரவு அதிகம் காணப்படும். அதிலும் எலி தொல்லை..தாங்கவே முடியாது. இதற்காகவே சிலரது வீட்டில் பூனை வளர்ப்பார்கள். நம்மால் வீட்டில் எலி குடியிருந்தாலே தாங்க முடியாத நிலையில், அமெரிக்காவில் உள்ள நகரத்தில் எலிகள் கூட்டம் கூட்டமாக காணப்பட்டு வருகிறது.
பல ஆண்டு காலமாக அந்த நகர்த்தி சூழ்ந்த எலிகளை கட்டுப்படுத்த, அந்நாட்டு அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் எலி தொல்லை விடாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் இதனை கட்டுப்படுத்துவதற்காக அந்நகரத்தின் நிர்வாகம் தற்போது புதிய யுக்தியை கையாள திட்டமிட்டுள்ளது. அதன்படி இதற்காக எலி பிடிக்கும் ஆட்களை நியமிக்க எண்ணியுள்ளது.
அதாவது எலி தொல்லைகளை ஒழிப்பதற்காக வேலைவாய்ப்பை ஒன்றை அறிவித்துள்ளது. எலி பிடிப்பதற்கு ஆட்கள் வேண்டி அந்நகர செய்தி தாள்களில் விளம்பர பரிசுரங்களையும் வெளியிட்டுள்ளது.
அதன்படி, எலிகளை அழிக்க எவர் முன்வந்தாலும் அவர்களுக்கு பெரும் தொகையை கொடுக்க தயாராக இருப்பதாகவும், அவைகளின் எண்ணிக்கையை அடக்க முறையான திட்ட மேலாண்மை, நகர்ப்புற திட்டமிடல் திறன் கொண்டவர் மற்றும் கொலையாளிக்கான உணர்வோடு இருப்பவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின்படி எலிகளை கொல்வதற்கு புதிய பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அதில் திட்டத்தின் இயக்குநருக்கு ஆண்டு சம்பளம் ஒரு கோடியே 30 லட்ச ரூபாய் (170,000 டாலர்) வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தற்போது வைரலாகி வருகிறது.
நியூயார்க்கில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்த எலி தொல்லைகளை விட இந்த ஆண்டில் (2022) எலிகள் பற்றிய புகார்கள் சுமார் 70% அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதனை தவிர்க்க பொதுமக்களுக்கு குப்பை காட்டுவதிலும் புதிய விதிகள் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.