அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் சாலையில் 18 சக்கரம் கொண்ட டிரக் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வாகனத்தின் மேல் இளைஞர் ஒருவர் நடனமாடிக் கொண்டு தனது செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது, வாகனம் மேம்பாலத்திற்கு அடியில் செல்லும் போது குனிந்து தப்பித்துக் கொண்டுள்ளார். பிறகு மீண்டும் வந்த பாலத்தைக் கவனிக்காமல் நடனமாடிக் கொண்டே இருந்தார். இதனால் அவர் பாலத்தின் மீது மோதி சாலையின் கீழே விழுந்துள்ளார்.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அந்த இளைஞர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். மேலும் விபத்து குறித்து போலிஸார் விசாரணை செய்து இளைஞர் யார் எனவும், தற்காக ட்ரக் மேல் நடனமாடினார் எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர சம்பவத்தை பின்னால் வாகனத்தில் வந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாகவே இளைஞர்கள் பலரும் சுரங்கப்பாதை, கார், ட்ரக் போன்ற வாகனங்கள் மீது ஏறி வீடியோ எடுத்து விபத்துக்குள்ளாகும் சம்பவம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. உலகம் முழுவதுமே ரீல்ஸ் வீடியோ எடுக்கும் ஆசையில் இளைஞர்கள் பலர் இப்படி உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்தே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.