விமானப் படை சாகசத்தின் போது இரண்டு போர் விமானங்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி வெடித்து சிதறிய சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் எக்ஸிகியூட்டிவ் விமான நிலையத்தில் விமானப்படை சாகச நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. இதில் இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட விமானங்கள் பங்கேற்றன.
மேலும் பெரிய ரக போயிங் B-17 குண்டுகள் வீசும் விமானம் மற்றும் ஒரு சிறிய ரக பெல் B-63 கிங்கோப்ரா என்ற விமானமும் பங்கேற்று விண்ணில் பறக்க விடப்பட்டன. அப்போது அந்த இரு விமானங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. ஒரு விமானம் முன்னே பறக்க, பின்னால் வந்த மற்றொரு விமானம் அதன்மீது மோதியது.
அப்போது இரண்டும் மோதியதில், இரண்டு விமானங்களும் வெடித்து சிதறியது. விமானங்கள் வெடித்து சிதறியபோது அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. விமான சாகசம் நடைபெற்றுக்கொண்டிருந்ததால், அதனை அங்கு காண வந்த போதுமக்கள் பலரும் வீடியோ எடுத்தனர். அப்போது இந்த இரண்டு விமானங்களும் மோதிக்கொள்ளும் வீடியோவும் இடம்பெற்றிருந்தது.
இதனை கண்ட பொதுமக்கள் அங்கிருந்து அலறி தப்பியோடினர். இதை தொடர்ந்து அவசர கால மீட்பு படையினருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இரு விமானங்களிலும் 6 பேர் பயணித்திருக்கலாம் என முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் குறித்து அம்மாகாண மேயர் எரிக் ஜான்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், "நமது நகரில், விமான சாகச நிகழ்ச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். அதுகுறித்த உண்மையான தகவல்கள் இன்னும் வரவில்லை. இந்த நேரத்தில் உறுதிப்படுத்தப்படவில்லை. போலீஸ் மற்றும் தீயணைப்பு, மீட்பு குழுவினர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்" என பதிவிட்டுள்ளார்.
இந்த கோர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம், கனெக்டிகட் விமான நிலையத்தில் B-17 என்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்னர் என்பது குறிப்பிடத்தக்கது.