ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வந்த அரசை வீழ்த்தி தற்போது அங்கு தாலிபான் ஆட்சி நடைபெற்று வருகிறது. தாலிபான் ஆட்சிக்கு வந்ததும் அங்குள்ள மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் பெண்களுக்கு உண்டான உரிமைகளும் பறிக்கப்பட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது.
அதோடு அங்கு தாலிபனுக்கு எதிரான அமைப்புகள் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டு வருவதால் அங்கு தொடர்ந்து பதற்ற நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கு இடையே எல்லை பிரச்னைகள், பயங்கரவாதம் தொடர்பாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வர உதவினாலும் தற்போது எதிர்தரப்புக்கு பாகிஸ்தான் உதவுவதாக தாலிபான் தலைவர்கள் கருதி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் நடக்கும் குண்டு வெடிப்புகளுக்கு பின்னர் பாகிஸ்தான் இருப்பதாக தாலிபான் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், தலிபான்கள் அதிகாரி அப்துல் பாசிர் ஷெர்சாடி, வெளியிட்ட வீடியோவில், "ஒவ்வொரு ஆப்கானிஸ்தானியரும் பாகிஸ்தானை வெறுக்கின்றனர். ஆப்கானிஸ்தானுக்கு 5,000 ஆண்டுகால வரலாறு இருக்கிறது; அதை எவ்வாறு பாதுகாப்பது என்று அவர்களுக்கு தெரியும். பாகிஸ்தான் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த ஆயிரக்கணக்கானோர் இருக்கின்றனர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை எங்களது இரண்டாவது தலைநகராக மாற்றுவோம்." என எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.