சீனாவுக்கு அருகில் உள்ள தீவு நாடு தைவான். யுஜிங்கில் இருந்து கிழக்கே 85 கிமீ தொலைவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்த தகவல் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. எனினும் ஏராளமானோர் காயமடைந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இந்த நிலநடுக்கம் தொடர்பாக இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒரு பள்ளிக்கூடத்தில் விளையாட்டு கூடம் இடிந்து விழும் காட்சிகள் பதிவாகியுள்ளது. மற்றொரு வீடியோவில் ரோட்டில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
இன்னொரு வீடியோவில் நிற்கும் ரயில் நிலநடுக்கம் காரணமாக ஆடுவது பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இரண்டு டெக்டோனிக் தட்டுகளின் சந்திப்பிற்கு அருகில் தீவு அமைந்திருப்பதால் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவியல் மையம் கூறியுள்ளது.
அரசு முழு வேகத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அரசு தரப்பில் அறிக்கை வெளியாகியுள்ளது.