ஆப்பிரிக்க நாடான கானாவில் அக்ரா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் இருக்கும் சிங்கம் ஒன்று கடந்த ஆண்டு இறுதியில் இரண்டு வெள்ளை சிங்கக் குட்டிகளை ஈன்றது. வெள்ளை சிங்கங்கள் அபூர்வமானது என்பதால் அதை காண பல்வேறு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், அந்த வெள்ளை சிங்க குட்டிகளை திருட ஒருவர் முயன்றுள்ளார். இதற்காக பாதுகாப்புப் பகுதியை தாண்டிய அந்த நபர் வெள்ளை சிங்கக் குட்டிகள் இருக்கும் இடத்திற்கு சென்றிருக்கிறார். குட்டிடின் அருகே ஒருவர் செல்வதைக்கண்ட தாய் சிங்கம் உடனடியாக அவரை கடுமையாக தாக்கியுள்ளது.
சிங்கம் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதைக் கண்ட பூங்கா ஊழியர்கள் உயிரிழந்த நபரை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய கானா இயற்கை வள பாதுகாப்பு அமைச்சர் பெனிட்டோ "குட்டிகளை காப்பாற்றுவதற்கு சிங்கம் இவ்வாறு செய்திருக்கலாம். இந்த சம்பவம் காரணமாக தற்காலிகமாக பூங்காவுக்கு பொதுமக்கள் வருவது ரத்து செய்யப்பட்டுள்ளது. யாரும் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.