தனியார்மயமே அனைத்துக்கும் தீர்வு, அரசு சொத்துக்களை தனியாருக்கு கொடுத்தால்தான் நாடு முன்னேறும் என உலகுக்கே பாடம் எடுத்து வந்தது அமெரிக்கா. அதன்படி கல்வியில் இருந்து மருத்துவம் உள்ளிட்ட அனைத்தையும் தனியாருக்கு கொடுத்து வரிவசூல் மட்டுமே செய்துவந்தது.
இந்த நிலையில், எந்த தனியார்மயத்தை அமெரிக்க மக்கள் போற்றி வந்தார்களோ அதே அமெரிக்க மக்களே தற்போது தனியார்மயத்தின் தீவிரபாதிப்பை சந்தித்து வருகிறார்கள். அனைத்தும் தனியாருக்கு என்று வகையில் அமெரிக்காவில் மின்சார விநியோகமும் தனியாரின் வசமே இருந்து வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதனால் ஏராளமான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பு அமெரிக்காவையும் விட்டுவைக்கவில்லை. பணவீக்கம் பல மடங்கு அதிகரித்துள்ளதால் அங்கு பொதுமக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
இதனால் பொருள்களின் விலை அமெரிக்காவில் உச்சத்தில் இருந்து வருகிறது. அதில் மின்கட்டணமும் தப்பவில்லை. தனியார் நிறுவனங்கள் மின்கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளனர். இது அமெரிக்க மக்களை நேரிடையாக பாதித்துள்ளது.
இந்த மின்கட்டண உயர்வால் மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள், மின் கட்டணத்தை கூட செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர் என்று ஆய்வறிக்கை ஒன்றில் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய நாடுகளை போல அமெரிக்காவிலும் வெப்ப அலை அளவு அதிகரித்துள்ளது. இதனால் வீட்டில் இருக்கும்போது குளிர்சாதன வசதி இல்லாமல் இருக்கமுடியாது என்ற சூழலுக்கு அமெரிக்க மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் மின்சார பயன்பாடு பலமடங்கு அதிகரித்துள்ளது. இதில் மின்கட்டண உயர்வும் ஏற்பட்டுள்ளதால் அங்கு நடுத்தர மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மின்கட்டண உயர்வோடு எரிவாயு கட்டணமும் அங்கு 15 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. தனியார்மயம் எந்த அளவு ஆபத்தானது என்பதை இந்த நிகழ்வு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.