கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று சில மாதங்களில் உலகெங்கும் பரவி தற்போது வரை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா தொற்றை சீனாவே உருவாக்கி உலகெண்டும் பரப்பியது என அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் கடும் குற்றச்சாட்டை முன்வைத்தன.
இந்த குற்றசாட்டை தொடர்ந்து சீனா மறுத்துவந்தாலும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த குற்றசாட்டை தொடர்ந்து கூறி வந்தன. பின்னர் கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வுகள் அதிகரித்த நிலையில், இத்தகைய வைரஸை ஆய்வகங்களில் உருவாக்க வாய்ப்பில்லை, இது இயற்கையாகதான் பரிணமித்திருக்க வேண்டும் என ஆய்வு முடிவுகள் வெளியாகின.
கொரோனா வைரஸ் முதலில் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டது. அதிலும் அங்கிருந்த கடல் உணவு சந்தையில் இருந்தே இந்த வைரஸ் மனிதருக்கு பரவியிருக்க வேண்டும் என பல ஆய்வு முடிவுகள் கூறின. அதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது ஆய்வு ஒன்று வெளிவந்துள்ளது.
'சயின்ஸ்' இதழில் வெளிவந்துள்ள இரண்டு கட்டுரைகள் தாங்கள் மேற்கொண்ட கொரோனா குறித்த ஆய்வுகளில் உகான் நகர கடல் உணவு சந்தை கொரோனா வைரஸின் மையமாக இருந்தது என்று கூறப்பட்டுள்ளது.
ஆரம்ப கால கொரோனா பரவல் கடல் உணவு சந்தை பகுதியை சுற்றியே அதிகள் பதிவாகியுள்ளது. அதிலும் பெரும்பான்மையானவை யாங்சே ஆற்றின் மேற்குக் கரைக்கு அருகிலுள்ள மத்திய உகானில் நடந்துள்ளது.
டிசம்பர் 20ம் தேதிக்கு முன்னர் பதிவான 8 கொரோனா பாதிப்புகளும் கடல் உணவு சந்தை இருக்கும் தெற்கு பகுதியில் ஏற்பட்டன. அந்த பகுதிதான் பாலூட்டிகள் விற்பனை செய்யப்படும் பகுதிகளாகும்.
கொரோனா வைரஸ் சார்க்ஸ் வைரஸில் இருந்தே பரவியதாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், 2019 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி முதல் இந்த சார்க்ஸ் வைரஸ் விலங்கிடமிரூந்து மனிதனுக்குப் பரவுதல் நிகழ்ந்தது என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் உகான் நகர கடல் உணவு சந்தையில் இருந்த பாலூட்டிக்கு சார்க்ஸ் வைரஸ் பரவி அதில் இருந்து மரபணு மாற்றம் அடைந்து மனிதருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது என்பதையும் அந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது.