துருக்கி நாட்டின் தலைநகர் அங்காரவில் இருந்து ஜெர்மனிக்குக் கடந்த 21ம் தேதி விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றுள்ளது. இந்த விமானத்திலிருந்த ஊழியர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட உணவை எடுத்துச் சாப்பிட்டுள்ளனர்.
அப்போது ஒரு ஊழியரின் உணவில், வெட்டப்பட்ட நிலையில் பாம்பு தலை ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். முதலில் காய்கறிகளுடன் சேர்ந்து இருந்ததால் பச்சையாக இருந்த அது என்ன என்ற சந்தேகம் அவருக்கு இருந்துள்ளது.
பின்னர் அதை உற்று நோக்கிய பிறகே அது காய்கறி அல்ல பாம்பு தலை என அவர் உறுதி செய்துள்ளார். இது குறித்து அந்த ஊழியர் சமூகவலைதளத்திலும் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து அந்த விமான நிறுவனம் தங்களுக்கு உணவு வழங்கிவந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தை நிறுத்தியுள்ளது.
இதையடுத்து விமானத்திற்கு உணவு வழங்கிய நிறுவனம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. நாங்கள் சமைக்கும் உணவுகள் தரமாகவே சமைத்துக் கொடுக்கப்படுகிறது. இதை வேண்டும் என்றே யாரோ ஒருவர் செய்திருக்கிறார்கள் என தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து விமானநிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விமானத்தில் கொடுத்த உணவில் பாம்பு தலை இருந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.