கடந்த 2020 ஆம் ஆண்டு உலக அளவில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு விசயம் தான் கொரோனா. இந்த கொரோனா தாக்கத்தினால், உலக மக்களின் வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. சீனாவில் உருவான இந்த கொரோனா வைரஸ், அனைத்து நாடுகளுக்கும் பரவி கோடி கணக்கான மக்கள் இறந்துள்ளனர்.
இந்த வைரஸ் தாக்கத்தால், இந்தியாவிலும் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். மேலும் கொரோனா அலை 1,2 என்று தொடர்ந்துகொண்டே இருந்தது. இந்த அலைகளுக்கு பிறகு ஒமிக்ரான் வைரஸும் பல்வேறு நாடுகளில் பரவி, இந்தியாவிலும் ஒரு சிலரிடம் கண்டறியப்பட்டது. இந்த கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் தீராமல் இருக்கும் நிலையில், தற்போது 'மார்பர்க்' என்று ஒரு வைரஸ் உருவாகியுள்ளது.
கானா நாட்டில் கடந்த மாதம் இருவருக்கு உடல்நிலை சரி இல்லை என்று மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கே அவர்கள் இருவரின் மாதிரிகளை (Samples) எடுத்து பரிசோதித்ததில், அவர்கள் இருவருக்கும் மார்பர்க் வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பாதிக்கப்பட்ட இருவரும் நேற்று உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அப்பகுதி மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறித்தியுள்ளனர்.
மார்பர்க் வைரஸ் எளிதில் பரவக்கூடியது என்பதால், அந்த இருவருடன் இருந்த 98 பேரை தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வைரஸானது கொரோனாவை போல், பழந்தின்னி வெளவால்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியதாக கூறப்படுகிறது. எனவே அங்கிருக்கும் மக்கள் யாரும் வெளவால்கள் அதிகம் குடியிருக்கும் குகைகள் போன்ற பக்கங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும், சாப்பிடக் கூடிய இறைச்சி மற்றும் அசைவ உணவுகளை நன்றாக கழுவி சமைத்து சாப்பிடுமாறும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தலைவலி, காய்ச்சல், தசை வலிகள், இரத்த வாந்தி உள்ளிட்டவை மார்பர்க் வைரஸின் அறிகுறிகள் ஆகும். மார்பர்க் வைரஸால் பாதிக்கப்படக் கூடியவர்கள் மிகக் கடுமையான உடல்நலக் கோளாறு முதல் மரணம் வரை ஏற்படலாம். மார்பர்க் வைரஸானது, எபோலா வைரஸ் தொற்றின் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இதற்கான தடுப்பூசி இன்னும் கண்டறியப்படாததால், மக்கள் அதிகம் தண்ணீரை குடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த வைரஸானது முதல் முறையாக 1967 ஆம் ஆண்டு ஜெர்மனியில் கண்டறியப்பட்டது. அதன் பின் அங்கோலா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, கென்யா, தென்னாப்பிரிக்கா, உகாண்டா ஆகிய நாடுகளிலும் இந்த நோய் வெவ்வேறு ஆண்டுகளில் கண்டறியப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு கினியா நாட்டில் இந்த நோய் பரவியது. பின்னர் தற்போது கானா நாட்டில் பரவலாக காணப்பட்டு வருகிறது.
முன்னதாக 1998 - 2000 ஆண்டு காலகட்டத்தில், காங்கோ ஜனநாயகக் குடியரசு-வில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட 154 பேரில் 128 பேரும், 2004- 2005 ஆண்டு காலகட்டத்தில், அங்கோலா நாட்டில் 252 பேரில் 227 பேரும் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு (2021) கினியா நாட்டில் இந்த நோயால் பாதிக்கப்பட்டஒருவரும் உயிரிழந்தார்.
இந்த நிலையில், கொரோனா, ஒமிக்ரான் போன்ற வைரஸ் பட்டியலில் மார்பர்க் வைரஸும் இடம்பிடித்துள்ளது. கொரோனா தாக்கமே குறையாத நிலையில், தற்போது இந்த வைரஸை எண்ணி மக்கள் பீதியில் உள்ளனர்.