உலகளவில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் உள்ள ஈபிள் டவருக்கு முக்கிய இடம் எப்போதும் உண்டு. ஐரோப்பிய சுற்றுலா செல்பவர்கள் பெரும்பாலும் ஈபிள் டவரை பார்க்காமல் திரும்புவதில்லை.அந்த அளவு உலக மக்களில் கவனத்தை ஈபிள் டவர் ஈர்த்துள்ளது.
பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான, உலகக் கண்காட்சி விழாவுக்கு நுழைவாயில் வளைவாக ஈபிள் டவர் கட்டப்பட்டது. அப்போதில் இருந்து பிரான்ஸ் நாட்டின் அடையாளங்களில் ஒன்றாக இது திகழ்ந்து வருகிறது.
மொத்தம் 1,063 அடி உயரம் கொண்ட புகழ்பெற்ற இந்த ஈபிள் டவர் தற்போது துருப்பிடித்து மோசமான நிலையில் இருப்பதாக தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து அதை பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை உலக அளவில் எழுந்தது.
இந்த இலையில் இந்திய மதிப்பில் சுமார் ரூ.489 கோடி (60 மில்லியன் யூரோ) செலவில் ஈபிள் டவர் வண்ணம் பூசப்பட்டு வருகிறது. ஈபிள் டவரில் இப்படி வண்ணம் பூசப்படுவது இது 20-வது முறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்பே தொடங்கப்பட்ட இந்த திட்டம் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது. கொரோனா முடிந்த பின்னரே வண்ணம் பூசுவது மீண்டும் தொடங்கப்பட்டது. தற்போது பார்வையாளர்கள் அதிகரித்துள்ள நிலையில் வண்ணம் பூசும் வேலைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.