கடந்த சில ஆண்டுகளாக உலகத்தையே புரட்டிப்போட்ட கொரோனா பெரும் தொற்றிலிருந்து தற்போதுதான் உலகம் மீண்டு வரும் நிலையில் சில நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்துள்ளது.
அதிலும் கொரோனாவின் முந்தைய தாக்குதலிலிருந்து தப்பியதாக கூறப்பட்ட வடகொரியா தற்போது கொரோனாவால் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது.இந்த நிலையில் வட கொரியாவின் சில மாகாணங்களில் புதிய வகையான குடல் தொற்று நோய் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது .
வடகொரியாவில் நேற்று மட்டும் 23,160 பேருக்கு புதிய வகை குடல் தொற்று நோய் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த நோய் பாதிப்பால் 73 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோய் சுகாதாரமற்ற உணவுகளாலும், முறையாக சுத்திகரிக்கப்படாத குடிநீராலும் பரவுகிறது என சில ஆராச்சியாளர்கள் கூறியுள்ளனர். மேலும், இந்த குடல் தொற்று நோய் வேறு நாடுகளுக்கும் பரவலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
ஏற்கனவே பல்வேறு நாடுகளின் பொருளாதார தடைகளால் வடகொரியா பெரும் பாதிப்பை சந்தித்து வரும் நிலையில் தற்போது அங்கு பரவும் கொரோனா மற்றும் குடல் தொற்று நோய் காரணமாக அந்த நாடு கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது.