நாய் உணவை சாப்பிட ரூ.5 லட்சம் சம்பளம்!
இங்கிலாந்தில் உள்ள நிறுவனம் ஒன்று நாய் உணவை 5 நாட்கள் சாப்பிடும் நபருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த வேலைக்கு, தேர்வு செய்யப்படும் நபருக்கு என்று தனித்தகுதிகள் எதுவும் தேவையில்லை. எனினும், நாய் உணவை சாப்பிட்டால் ஒவ்வாமை எதுவும் ஏற்படவில்லை என இந்த வேலைக்கு வருவோர் உறுதி செய்ய வேண்டும். ஒருவேளை ஒவ்வாமை ஏற்பட்டால் அதுபற்றிய விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். இதன்படி, 5 நாட்களுக்கு நாய் உணவை சாப்பிட வேண்டும்.
கோதுமை ஏற்றுமதிக்கு தடைவிதித்தது ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் புதிய அரசை உலக நாடுகள் எதுவும் முறைப்படி அங்கீகரிக்காததால் அந்த நாட்டுக்கு சர்வதேச நிதி கிடைப்பது தடைப்பட்டுள்ளது. இதனால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அங்கு 2 கோடிக்கும் அதிகமான மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக ஐ.நா. கூறுகிறது. இந்த நிலையில் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆப்கானிஸ்தானில் இருந்து கோதுமை ஏற்றுமதிக்கு தலுபான்கள் தடைவிதித்துள்ளனர்.
மரியுபோல் நகரை முழுமையாக கைப்பற்றியது ரஷியா
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 87-வது நாளை எட்டியுள்ளது. மரியுபோல் நகரில் ரஷியாவின் வசம் சிக்காமல் எஞ்சி இருந்த அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்த உக்ரைன் படை வீரர்கள் 2 ஆயிரம் பேர் சரண் அடைந்துள்ளதாக ரஷிய ராணுவ மந்திரி செர்கே லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். உக்ரைனில் உள்ள மரியுபோல் நகரம் முழுவதும் ரஷிய படைகள் வசம் வந்துவிட்டது என ரஷியா ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றியாக வேண்டும் என்ற முனைப்பில் அங்கு உக்கிரமான தாக்குதலை ரஷியா நடத்தி வருகிறது. ரஷிய போர் விமானங்கள் அங்கு குண்டுமழை பொழிந்து வருகின்றன.
இஞ்சி, மூலிகை தேநீர் - நாட்டு மக்களுக்கு வடகொரிய பரிந்துரை!
வடகொரியாவில் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் 2.19 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். போதுமான மருத்துவ கட்டமைப்பு இல்லாமை, மருந்து மாத்திரைகள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் கொரோனாவை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு திணறி வருகிறது. இந்நிலையில் கொரோனாவை எதிர்கொள்ள இஞ்சி, மூலிகை தேநீா் போன்ற பாரம்பரிய மருந்துகளை மக்கள் பருக வேண்டும் என அந்த நாட்டு அரசு ஊடகம் பொதுமக்களிடம் பரிந்துரைத்து வருகிறது.
இந்திய வம்சாவளி மீது ரூ.9 கோடி மோசடி வழக்கு
சிங்கப்பூரில், 9 கோடி ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் மீது, 21 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், முரளிதரன் முகுந்தன். இவர், ஊய் பாய்க் செங் என்ற சீன வம்சாவளி பெண்ணிடமும், மாரிமுத்து என்ற இந்திய வம்சாவளியிடமும் 9 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். இது தொடர்பான புகாரில், முரளிதரன் முகுந்தன் மீது போலிஸார், 21 குற்றப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த குற்றங்களுக்கு முரளிதரனுக்கு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் கிடைக்கும் என, போலீசார் தெரிவித்தனர்.