உலகம் முழுவதும் 2019ம் ஆண்டு இறுதியில் பரவத்துவங்கிய கொரோனா தொற்று 2020ம் ஆண்டில் தீவிரமடைந்தது. இந்த தொற்றால் ஊரடங்கு போன்ற கடும் கட்டுப்பாடுகள் உதிக்கப்பட்டது. இந்த கொரோனா தொற்றால் உலகின் வல்லரசு நாடுகளாகக் கருதப்படும் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளே கடுமையான பாதிப்புகளை சந்தித்தது.
கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் கோடிக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். உலகமே கொரோனா தொற்றில் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தபோது வட கொரியாவில் மட்டும் யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துவந்தது.
இது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதன் அண்டை நாடான சீனா, ரஷ்யா, தென்கொரியாவில் கொரோனா தொற்று பாதிப்பு இருந்த நிலையில் எப்படி வட கொரியாவில் மட்டும் தொற்று ஏற்படவில்லை என பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
மேலும் வட கொரியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்களைச் சுட்டு கொலை செய்து விடுவதாகவும் ஒரு செய்தி பரவியது. ஆனால் அதை அந்நாட்டு அரசு மறுத்தது. தற்போது கொரோனாவின் பிடியிலிருந்து உலகம் மீண்டு வரும் நிலையில் வட கொரியாவில் முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து கொரோனாவை நாங்கள் நிச்சயம் வெல்வோம் என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் தெரிவித்துள்ளார். ஜனவரி 3,2020 முதல் இந்த ஆண்டு மே 11 வரை வட கொரியாவில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும், பூஜ்ஜியமாக இறப்புகள் பதிவாகியுள்ளன என்றும் WHO தகவல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.