2030ஆம் ஆண்டுக்குள் ஒவ்வோர் ஆண்டும் 560 பேரழிவுகள் ஏற்படும் - ஐ.நா. கடும் எச்சரிக்கை!
பருவகால மாற்றங்கள் கவனிக்கப்படாமல் போனால் 2030ம் ஆண்டுக்குள் ஒவ்வோர் ஆண்டும் 560 பேரழிவுகள் ஏற்படும் என ஐ.நா. கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐ.நா. அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்று, வரும் ஆண்டுகளில் பூமியானது முன்பிருந்த நிலையை விட மிக அதிக பேரழிவுகளை எதிர்நோக்க வேண்டிய அபாய நிலையில் உள்ளது என சுட்டி காட்டி உள்ளது.
அந்த அறிக்கையில், தற்போது காணப்படும் பருவகால மாற்றங்கள் கவனிக்கப்படாமல் போனால், வருகிற 2030ம் ஆண்டுக்குள் ஒவ்வோர் ஆண்டும் உலக நாடுகள் 560 என்ற பேரழிவுகளை நோக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இயற்கை பேரிடர்கள் மட்டுமின்றி கொரோனா பெருந்தொற்று, பொருளாதார சரிவு மற்றும் உணவு பற்றாக்குறை ஆகிய அனைத்தும் இந்த பருவகால மாற்ற எதிரொலியாக நடைபெறும் என்று அறிக்கை தெரிவித்து உள்ளது.
பனிக்கட்டிகளுக்கு கீழே 295 அடி தூரத்துக்கு நீச்சல் அடித்து கின்னஸ் சாதனை படைத்த பெண்!
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர், பனிக்கட்டிகளுக்கு அடியில் 295 அடி 3 இன்ச் தூரம் நீச்சலடித்து புதிய கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த Amber Fillary நீச்சலில் அதீத ஆர்வம் கொண்டவர். இவர் தற்போது இரண்டாவது முறையாக நீச்சலில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். பனிக்கட்டிகளுக்கு அடியில் 295 அடி 3 இன்ச் தூரம் நீச்சல் அடித்து சாதனை புரிந்துள்ள இவர், இரண்டு வருடங்களுக்கு முன் நார்வேவில் 229 அடி 7.9 இன்ச் தூரம் நீச்சல் அடித்து கின்னஸ் சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இடைக்கால அரசு அமைக்க கோத்தபய சம்மதம்
இலங்கையில் இடைக்கால அரசாங்கம் அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே சம்மதித்துள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன. இந்த நிலையில் ராஜபக்சே அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஆதரவு உள்ளது என்று முன்னாள் அமைச்சரும், அதிருப்தி எம்.பி.யுமான உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
“ஐக்கிய மக்கள் சக்தி கட்சியால் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு 113 உறுப்பினர்கள் ஆதரவு கிடைக்கும் வரை காத்திருக்குமாறு கூறினோம். தற்போது எங்களிடம் 120 பேரின் ஆதரவு உள்ளது. பதவியில் இருந்து விலக பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது”என்றும் உதயகம்மன்பில கூறியுள்ளார்.
‘‘ட்விட்டர் எதிர்காலம் நிச்சயமற்றது’’- ஊழியர்களிடம் பராக் அகர்வால் ஆதங்கம்
ட்விட்டர் சமூக ஊடக நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சயமற்றது, ட்விட்டர் கைமாறும் நிலையில் அது எந்த திசையில் செல்லும் என்று எங்களுக்குத் தெரியாது என அதன் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் கருத்து தெரிவித்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ள நிலையில் இந்த கருத்தை அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் பெண்களை கற்பழித்துக் கொன்ற ரஷ்ய வீரர்கள் : பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்
உக்ரைனின் புச்சா, இர்பின் உள்ளிட்ட நகரங்களில் இருந்து ரஷிய படைகள் சமீபத்தில் வெளியேறிய பின்பு அங்கு ஆய்வு நடத்தியபோது அப்பாவி மக்கள் பலரை ரஷ்ய வீரர்கள் கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது. தெருக்களில் இருந்து கொத்துக் கொத்தாக பிணங்கள் மீட்கப்பட்டன. அந்த உடல்களுக்கு தற்போது பிரேத பரிசோதனை நடந்து வருகிறது. இதில் ரஷ்ய வீரர்கள் போட்ட வெறியாட்டங்கள் அம்பலமாகி வருகிறது. அந்தவகையில் பெண்களை கொலை செய்வதற்கு முன்பு, கொடூரமாக கற்பழித்து இருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தடயவியல் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.