1) ஆப்கானிஸ்தானில் வான்வழி தாக்குதல்: பாகிஸ்தானுக்கு தாலிபான்கள் எச்சரிக்கை!
ஆப்கானிஸ்தானின் குனார் மற்றும் கோஸ்ட் மாகாணங்களில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதலை நடத்தியதாக தாலிபான்கள் தெரிவித்தனர். இது குறித்து ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் முல்லா முகமது யாகூப் கூறும்போது, நாங்கள் அண்டை நாடுகளிடமிருந்து பிரச்சனை மற்றும் சவால்களை எதிர்கொள்கிறோம். குனார்வில் நுழைந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தேசிய நலன்கள் காரணமாக அந்த தாக்குதலை பொறுத்துக் கொண்டோம். ஆனால் அடுத்தமுறை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்றார். இவ்வாறு பாகிஸ்தானுக்கு தாலிபான்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
2) தனது மரண தேதியை முன்பே குறிப்பிட்டு உயிரிழந்த பருவகால செயற்பாட்டாளர்
அமெரிக்காவில் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள சுப்ரீம் கோர்ட்டு கட்டிடத்தின் முன் பூமி நாளான கடந்த 22-ந் தேதி மாலை 6.30 மணியளவில் நபர் ஒருவர் தன் மீது திடீரென்று தீ வைத்துக் கொண்டார். விசாரனையில் அவரது பெயர் வின் புரூஸ் எனவும் அவர் தன்னை ஒரு புத்த மதத்தினை சேர்ந்தவர் என்றும் பருவகால செயற்பாட்டாளர் எனவும் அவருடைய பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபரிலேயே பேஸ்புக் பதிவு ஒன்றில் தீ பற்றிய படம் ஒன்றையும், 4/22/2022 என்ற அவரது மரண நாளையும் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
3) பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இம்மானுவேல் மேக்ரான் மீண்டும் வெற்றி - உலக தலைவர்களிடம் இருந்து குவியும் வாழ்த்து!
பிரான்ஸ் தேர்தல் முடிவுகளின்படி, தற்போதைய அதிபர் இம்மானுவேல் மேக்ரான் 58.8 சதவீதம் வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராக பதவியேற்க உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மரைன் லு பென் 42 சதவீதம் வாக்குகள் பெற்றார். இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்றுள்ள மேக்ரானுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஸ்பெயின், சுவீடன், ருமேனியா, லிதுவேனியா, பின்லாந்து, நெதர்லாந்து மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல், உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் குட்ரெஸ், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி என பல தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
4) மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி நாட்கள் ஒதுக்கீடு: தாலிபான்கள் புதிய அறிவிப்பு
காபூல் பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி நாட்கள் ஒதுக்கீடு செய்ய உள்ளதாக தாலிபான்கள் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். பல்கலைக்கழகங்களில், மாணவ, மாணவிகள் சேர்ந்து படிப்பதை தடுக்கும் வகையில், மாணவிகள் காலை நேரத்திலும், மாணவர்கள் பிற்பகல் நேரத்திலும் வர வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்தநிலையில், இருபாலர் சேர்ந்து படிக்கும் முறையில் நேற்று புதிய உத்தரவை பிறப்பித்தனர். புதிய கால அட்டவணைப்படி, வாரத்தில் 3 நாட்கள் முழுக்க முழுக்க மாணவிகள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். அந்த நாட்களில் மாணவர்களுக்கு அனுமதி இல்லை. மீதி 3 நாட்கள் முழுக்க முழுக்க மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.
5) சூடானில் இரு தரப்பினருக்கு இடையே பயங்கர மோதல் - 168 பேர் பலி
சூடானில் இரு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில் 168 பேர் பலியாகியுள்ளனர். சூடானின் மேற்கு பகுதியில் உள்ள டர்பர் மாகாணத்தின் தலைநகர் ஜெனீனாவில் வசிக்கும் பழங்குடியினரில் இரு பிரிவுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பையும் சேர்ந்த தனி நபர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு கோஷ்டி மோதலாக வெடித்தது. இரு தரப்பையும் சேர்ந்தவர்கள் கூர்மையான ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். வீடுகள் சூறையாடப்பட்டன. கடந்த இரு நாட்களாக நடந்த இந்த மோதலில் 168 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும், இந்த மோதலில் 98-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.