1) பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேசியா தடை!
இந்தோனேசியா தற்போது பாமாயில் சமையல் எண்ணெய் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது. இதனால், இந்தோனேசியா அடுத்த வாரம் முதல் பாமாயிலின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு ஜனாதிபதி அறிவித்துள்ளார். இதுகுறித்து இந்தோனேசியா ஜனாதிபதி ஜோகோ விடோடோ வெளியிட்ட அறிக்கையில் ‘சமையல் எண்ணெய் மற்றும் சமையல் எண்ணெய்கான மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வதை அரசாங்கம் தடை செய்கிறது. எது வரை தடை என்ற காலக்கெடு பின்னர் தீர்மானிக்கப்படும். இந்தக் கொள்கையின் அமலாக்கத்தை தொடர்ந்து கண்காணித்து மதிப்பீடு செய்யப்படும். இதனால் நாட்டில் சமையல் எண்ணெய் மலிவு விலையில் ஏராளமாக கிடைக்கும்’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2) போஸ்னியாவில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
தெற்கு போஸ்னியாவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பால்கன் முழுவதும் உணரப்பட்டது. நேற்று இரவு ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது லுபின்ஜே நகரத்திற்கு வடகிழக்கே ஒன்பது மைல் தொலைவில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெல்கிரேட், ஜாக்ரெப் மற்றும் ஸ்கோப்ஜே வரை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் அல்பேனியா மற்றும் தெற்கு இத்தாலியிலும் உணரப்பட்டதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
3) டிக் டாக், பப்ஜி செயலிகளுக்கு தடை!
ஆப்கானிஸ்தானில் டிக் டாக் மற்றும் பப்ஜி ஆகிய செயலிகளுக்கு தலீபான்கள் தடை விதித்துள்ளனர். தற்போது பொழுதுபோக்கு அடக்குமுறை என்று கூறப்படும் வகையில் டிக் டாக் மற்றும் பப்ஜி ஆகிய செயலிகளுக்கு தலீபான்கள் அரசு தடை விதித்துள்ளது. இளைஞர்கள் வழிதவறி செல்லும் வகையில் இந்த செயலிகளின் பயன்பாடு இருப்பதாக கூறி தலீபான்கள் தடை விதித்துள்ளனர். ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் பொழுது போக்கு அம்சங்கள் பலவற்றிற்கு தலீபான்கள் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு மிக மோசமான வாழ்க்கை தரம் இருப்பதாக 94 சதவீத ஆப்கானிஸ்தானியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
4) வியாழன் கிரகத்தில் வேற்றுகிரகவாசிகள்!
வியாழன் கிரகத்தில் வேற்றுகிரகவாசிகள் வாழ்வதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். வியாழனுக்கு நிறைய துணைக்கோள்கள் உள்ளன, ஆனால் அதில் முக்கியமான ஒன்றாக யூரோபா (Europa) என்ற நிலவில் வேற்றுகிரகவாசிகள் வாழலாம் என்று அண்மை கண்டுபிடிப்பு ஒன்று தெரிவிக்கிறது. உயிர்வாழ ஆதாரமான நீர் இருப்பு வியாழனின் நிலவான யூரோபாவில் இருப்பதால், அங்கு வேற்றுகிரகவாசிகள் வாழ்வதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாகவே இருக்கிறது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
5) 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரஷிய வீரர்களை கொன்றுவிட்டோம்!
போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைன் நடத்திய பதில் தாக்குதல்களில் 21,200க்கும் மேற்பட்ட ரஷிய வீரர்கள் கொல்லப் பட்டதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. 2,162 ராணுவ வாகனங்கள் சேதமடைந்துள்ளன. ரஷிய ராணுவத்தின் 838 பீரங்கிகள், 176 போர் விமானங்கள், 153 ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. மேலும் 1,523 வாகனங்கள் சேத்மடைந்துள்ளன என தெரிவித்துள்ளது. உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் போரில் சர்வதேச மனிதாபிமான சட்டம் மீறப்பட்டதாக தோன்றுகிறது என ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய தலைவர் கூறியுள்ளார்.