1) அமெரிக்காவில் பாதுகாப்பு ஆலோசகராக இந்திய வம்சாவளி பெண் நியமனம்
அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸின் பாதுகாப்புத் துறை ஆலோசகராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாந்தி சேத்தி நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க கடற்படையின் முன்னாள் அதிகாரியான சாந்தி சேத்தி, 2010 முதல் 2012 வரை அமெரிக்க போர் கப்பல் ஒன்றின் கமான்டராக பணியாற்றியவர். ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் துறையில் சாந்தி சேத்தி முதுகலை பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2) பாகிஸ்தானில் 34 அமைச்சர்கள் பதவியேற்பு
பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசில் 31 கேபினட் அமைச்சர்கள் 3 இணை அமைச்சர்கள் உள்பட 34 அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். இந்த பதவியேற்வு விழாவில் அதிபர் ஆரிப் ஆல்வி கலந்து கொள்ளவில்லை. இதனால் அவருக்கு பதில் பாகிஸ்தான் பாராளுமன்ற சென்ட் தலைவர் சாதிக் சஞ்சரானி புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிய உள்துறை அமைச்சராக ராணா சனாவுல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.
3) கடும் விமர்சனத்துள்ளான புதிய சுகாதார அமைச்சர் நியமனம்!
பாகிஸ்தானின் புதிய சுகாதார அமைச்சராக அப்துல் காதர் படேல் நியமிக்கப்பட்டது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. அப்துல் காதர் மீது நில பேரம், மின்சார திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாக இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மேலும் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்த வழக்கில் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு அப்துல் காதர் படேலுக்கு ஜாமின் வழங்கி உள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
4) லாவோஸ் நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டம் - 35 பேர் பலி!
தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ந் தேதி தொடங்கி 16-ந் தேதி வரை புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. புத்தாண்டையொட்டி அங்கு ஒரு வாரத்துக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது ஏற்பட்ட சாலை விபத்துகளில் சிக்கி 35 பேர் உயிரிழந்தாக, அந்த நாட்டின் பொது பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த 11-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையிலான 7 நாட்களில் 312 விபத்துகள் ஏற்பட்டதாகவும், இதில் 35 பேர் பலியானதோடு, 552 பேர் காயமடைந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக தலைநகர் வியன்டியேனில் 45 விபத்துகளில் 8 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
5) உக்ரைனுக்கு பாதுகாப்பு உடைகள், டிரோன்களை வழங்கும் ஜப்பான்!
உக்ரைனுக்கு பாதுகாப்பு உடைகள், முகக்கவசங்கள் மற்றும் டிரோன்களை ஜப்பான் அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுபற்றி ஜப்பான் ராணுவ அமைச்சகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “உக்ரைன் அரசுக்கு ஜப்பான் ராணுவ அமைச்சகம் என்.பி.சி. சூட்டுகள், முகக்கவசங்கள், டிரோன்களை வழங்க முடிவு செய்துள்ளது. தங்கள் நாட்டை பாதுகாக்க உக்ரைனியர்களின் போராட்டம் தொடர்கிறது. இதனால் ஜப்பான் ராணுவ அமைச்சகம், உக்ரைன் நாட்டுக்கு தனது அதிகபட்ச ஆதரவைத் தொடரும்” எனக் கூறப்பட்டுள்ளது.