1) கருங்கடல் துறைமுகங்களில் நுழைய ரஷ்ய கப்பல்களுக்கு பல்கேரியா தடை!
உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷியா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. அந்த வகையில் ரஷிய கொடி தாங்கிய கப்பல்கள் அனைத்தும் கருங்கடல் துறைமுகங்களுக்குள் நுழைய பல்கேரியா தடை விதித்துள்ளது. இதை அந்நாட்டின் கடல்சார் ஆணையம், தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் ஆபத்தில் உள்ள கப்பல்கள், மனிதாபிமான உதவியை நாடும் கப்பல்கள், எரிசக்தி பொருட்கள், உணவு, மருந்துகளை ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு செல்லும் கப்பல்களுக்கு விதிவிலக்கு வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2) பாகிஸ்தானின் புதிய பிரதமர் கொடுத்த 'முதல்' உறுதி!
இந்தியாவுடன் அமைதியான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் கூறியுள்ளார். பாகிஸ்தானின் 23வது பிரதமராக ஷெபாஸ் ஷரீப் பொறுப்பேற்றதற்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார். அதற்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்த ஷெபாஸ் ஷரீப், இந்தியாவுடன் அமைதி மற்றும் ஒத்துழைப்பை பாகிஸ்தான் விரும்புவதாகவும், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது இன்றியமையாதது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அமைதியை காக்கவும், சமூக பொருளாதார வளர்ச்சிக்கு இரு நாடுகளும் இணைந்து செயல்படுவோம் என்றும் பாகிஸ்தான் பிரதமர் கூறியுள்ளார்.
3) இலங்கையில் புதிதாக 17 அமைச்சர்கள் பதவியேற்பு!
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே புதிதாக 17 மந்திரிகளை நியமித்துள்ளார். தற்போது நியமிக்கப்பட்டுள்ள மந்திரி சபையின் அளவு சிறிதாக இருந்தாலும், அரசு பாதிப்பில்லாமல் இயங்கும். இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் எனவும் கூறியுள்ளார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்ஷே ஆகியோர் பதவி விலகக்கோரி மக்கள் போராடி வருகின்றனர். இதைத்தொடர்ந்து அந்நாட்டு மந்திரி சபையில் உள்ள அனைத்து மந்திரிகளும் தங்களது பதவியை ராஜினாமா செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
4) உலகில் 5-ல் ஒருவர் வறுமைக்குள் தள்ளப்படலாம்: ஐ.நா. கவலை
உக்ரைன் மீதான் ரஷ்ய போர் காரணமாக உலகில் 5-ல் ஒருவர் வறுமைக்கு தள்ளப்படலாம் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது. அதாவது 1.7 பில்லியன் மக்கள் வறுமை, பசி, பட்டினி போன்ற சூழலுக்கு தள்ளப்படுவார்கள். இது அண்மைக் காலங்களில் ஏற்படாத புதியதொரு சூழல் என்று எச்சரித்துள்ளது. உலக அளவில், உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் கோதுமை மற்றும் பார்லியை 30 சதவீதம் உற்பத்தி செய்கின்றன. குறைந்த அளவில் வளர்ச்சியடைந்த 45 நாடுகள், மூன்றில் ஒரு பங்கு கோதுமையை ரஷ்யா மற்றும் உக்ரைனிடம் இருந்து இறக்குமதி செய்கின்றன. இந்தப் போரால், தானிய ஏற்றுமதி தடைபட்டுள்ளது. விநியோக சங்கிலியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது என்று கூறியுள்ளது.
5) ஷாங்காய் மாகாணத்தில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு
சீனாவில் கொரோனா பரவல் உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, சீனாவின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்கு வகிக்கும் ஷாங்காய் நகரில் இதுவரை கண்டிராத பரவல் ஏற்பட்டுள்ளது. ஷாங்காய் நகரில் தொற்றை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வரும் நடவடிக்கையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்கு இடங்களை ஏற்பாடு செய்வதற்கு வீடுகளில் உள்ள மக்களை வெளியேற்றும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் 2417 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நகரின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஊரடங்கை அமல்படுத்தியுள்ள நிலையிலும் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது