அமெரிக்காவில் ஏப்ரல்-14 தேசிய சீக்கியர் தினம்!
அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ந் தேதியன்று தேசிய சீக்கியர் தினம் கொண்டாட நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 100 ஆண்டுகளாகவே சீக்கிய மக்கள் குடியேறி வருகின்றனர். இந்நிலையில், அந்த இன மக்களுக்கு ஒரு அங்கீகாரம் அளிக்க முடிவு எடுத்துள்ளனர். இதற்கான தீர்மானத்தை அந்த நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் மேரி.கே.ஸ்கான்லான் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை சக MP-க்கள் ஆதரித்து உள்ளனர். இதை சீக்கிய சமூகத்தினர் வரவேற்றுள்ளனர்.
கிழக்கு அண்டார்டிகாவில் ராட்சத பனிச்சரிவு!
கிழக்கு அண்டார்டிகாவில் கடுமையான வெப்பநிலை காரணமாக அங்கு முதல்முறையாக ராட்சத பனிப்பாறை உருகிச் சரிந்துள்ளது. 1,200 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்ட, ‘காங்கர் பனி அடுக்கு’ என்னும் பனி அடுக்குகள் உருகிச் சரிந்தது. அதன் அளவு ரோம் நகரத்தின் பரப்பளவுக்கு சமம் ஆகும். கடல் மட்டம் உயராமல் இருக்க அவை உதவும். வளிமண்டல பாதிப்பு, வெப்ப அலையால் அண்டார்டிகாவின் பனி முகடுகள் தாக்கப்படக் கூடும் என்று நாசாவின் விஞ்ஞானி கேத்தரின் கொல்லோ வாக்கர், சமீபத்தில் டிவிட்டரில் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
துனிசியா நாடாளுமன்றம் கலைப்பு!
பொதுமக்களின் எதிர்ப்பு போராட்டங்களைத் தொடர்ந்து, துனிசியா நாட்டின் அதிபர் நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டுள்ளார். இந்த நாட்டின் நாடாளுமன்றம் கடந்த 8 மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்தது. அரசியல் சாசனத்தை மாற்றி எழுதவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிபர் கைஸ் சையத் அதிகாரத்தை தானே கையில் எடுத்துக்கொண்டார். அதிலிருந்து நாட்டின் பொருளாதார நிலை மீதான கோபம், மக்களை தெருக்களில் இறங்கி போராட வைத்தது. அந்நாட்டின் MP-க்கள் காணொலிக்காட்சி வாயிலாக கூடி, நாடாளுமன்றத்தை முடக்கி வைத்த அதிபரின் உத்தரவை ரத்து செய்ய வாக்களித்தனர். அதனால் அதிபர் அதிரடியாக நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டுள்ளார்.
உலக நாடுகளுக்கு புதின் திடீர் எச்சரிக்கை
உலக நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். தங்களிடம் ரஷ்ய நாணயமான ரூபிளைக் கொண்டுதான் எரிவாயு வாங்க வேண்டும், அப்படி செய்யாவிட்டால் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் எனக் கூறி உள்ளார். ஏப்ரல்-1 முதல் இது அமலுக்கு வருகிறது. இதுபற்றி புதின் குறிப்பிடுகையில், “யாரும் எங்களுக்கு இலவசமாகத் தரவில்லை. நாங்கள் தொண்டு செய்யவும் போவதில்லை. எனவே ஒப்பந்தங்கள் நிறுத்தப்படும்” எனக் கூறி உள்ளார். ஜெர்மனி, இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் எரிவாயுவை பெரிய அளவில் நம்பி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நேபாள பிரதமர் 3 நாள் சுற்றுப்பயணம்!
நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தூபா இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதன்படி அவர் மத்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை இன்று சந்திக்க இருக்கிறார். இந்தப் பயணத்தில், இரு நாட்டு உறவுகள், வளர்ச்சி, வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட விஷயங்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.