உக்ரைனின் மரியுபோல் நகரில் தாக்குதலில் பலியான அப்பாவி மக்களின் சடலங்களை கொத்துக்கொத்தாகப் புதைக்கும் கோரக் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
உக்ரைனில் 16வது நாளாக ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள், அப்பாவி பொதுமக்கள் எனப் பலரும் பலியாகி வருகின்றனர்.
உக்ரைனில் முன்னேறியுள்ள ரஷ்ய ராணுவத்தினரின் வீடியோவை அந்த நாடு வெளியிட்டுள்ளது. ரஷ்யாவின் சில கவச வாகனங்களை உக்ரைன் ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனின் பல நகரங்கள் தரைமட்டமாகிவிட்டன.
மரியுபோல் நகரில், ரஷ்ய படையினர் முற்றுகையிட்ட ஒருவாரத்தில் சுமார் 1,200 பேர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய தாக்குதலுக்கு மத்தியில், சவக்கிடங்குகள் அனைத்தும் நிரம்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சுமார் 25 மீட்டர் அளவுக்கு தோண்டப்பட்ட குழியில் சடலங்களை மொத்தமாக புதைக்க நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மரியுபோல் நகரில் உயிரிழந்தவர்களின் உடலை வாகனங்களில் கொண்டு வந்து ஒரே இடத்தில் கொத்துக் கொத்தாக புதைக்கும் காட்சிகள் வெளியாகி அனைவரின் நெஞ்சை உலுக்கியுள்ளது.
மேலும், அங்கு போர் தொடர்வதால் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஒரு கேன் குடிநீர் வாங்குவதற்கு பல மணி நேரம் காத்துக்கிடக்கும் அவலமும் அரங்கேறி வருகிறது.