உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 12வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ் ஆகிய பகுதிகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
போரை நிறுத்துமாறு பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வந்தாலும் ரஷ்யா தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. இதனையடுத்து உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ரஷ்யா மீது அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன.
மேலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கச்சா எண்ணைய் இறக்குமதிக்குத் தடை விதித்ததால் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலையை 300 டாலராக உயர்த்துவோம் என ரஷ்யா உலக நாடுகளுக்குப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய நாட்டின் துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவக், "ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதிக்குத் தடை விதிப்பது உலகளாவிய சந்தையில் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் விலை இருமடங்காக அதிகரித்து கச்சா எண்ணெய்யின் விலை ஒரு பீப்பாய்க்கு 300 டாலராக உயர்த்தப்படும். மேலும் ஜெர்மனிக்கான முக்கிய எரிவாயு குழாய் திட்டமும் மூடப்படும்" என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரஷ்யாவின் இந்த பகிரங்க எச்சரிக்கையால் உலக நாடுகள் அடுத்து என்ன செய்வது என அஞ்சி வருகின்றனர். ஏற்கனவே ரஷ்யா தனது நட்பு நாடுகள் பட்டியலிலிருந்து அமெரிக்கா, உக்ரைன், கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட 17 நாடுகளை நீக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.