ரஷ்ய ராணுவப் படைகள் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து குண்டு மழை பொழிந்து வருகின்றன. உக்ரைன் மீது பல மணிநேரமாக வான்வெளி தாக்குதல் நடத்தும் ரஷ்யா தற்போது அந்நாட்டிற்குள் நுழைந்தும் தாக்கி வருகிறது.
இதையடுத்து, பொதுமக்கள் உக்ரைனில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்கள், சுரங்கப்பாதைகளில் தஞ்சமடைந்துள்ளனர். உக்ரைனில் வாழும் இந்தியர்களும் அங்கு உயிர் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், வீடுகள், தங்கும் விடுதிகள் அல்லது போக்குவரத்தில் எங்கிருந்தாலும் அந்தந்த நகரங்களிலேயே அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருங்கள் என உக்ரைனின் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
உக்ரைனில் உள்ள இந்தியர்களின் உதவிக்காக டெல்லியில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. உதவிக்கு 1800 118 797 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. situationroom@mea.gov.in என்ற இ-மெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உக்ரைன் விவகாரம் குறித்து இந்திய அரசின் வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் சிரிங்கலா இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய உதவியுள்ளது. 20,000 இந்தியர்கள் உக்ரைனில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களில் சுமார் 4,000 பேர் சில நாட்களுக்கு முன்பே நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர்.
உக்ரைனில் சிக்கித்தவித்து வரும் மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்பது தான் அரசின் மிக முக்கியமான வேலை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் விவகாரம் குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி இன்னும் சற்று நேரத்தில் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசுவார்.” எனத் தெரிவித்துள்ளார்.