உலகப்பொதுமறையான திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரின் பெயர் அமெரிக்காவில் உள்ள ஒரு தெருவிற்கு சூட்டப்பட்டுள்ளது. இந்தச் செய்தி உலகத் தமிழர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த வெர்ஜினியா மாகாணத்தின் பேர்பேக்ஸ் கவுண்டி பகுதியில் உள்ள சாலைக்கு ‘VALLUVAR WAY’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெர்ஜினியா மாகாணத்தின் சபை உறுப்பினர்களில் ஒருவரான டான் ஹெல்மர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், “தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த பலரைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமிதம் கொள்வதோடு, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க செயலால் பெருமிதம் கொள்கிறோம்: அமெரிக்காவில் உள்ள ஒரு சாலைக்கு முதல்முறையாக வள்ளுவரின் பெயர் சூட்டப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
வள்ளுவரின் பெயர் அமெரிக்க வீதிக்கு வைக்கப்பட்டுள்ளதை அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர். திருக்குறள் புகழ் உலகப் புகழ்பெற்ற நூலாக இருந்தாலும் அவரது பெயரில் அமெரிக்காவில் முதல் முறையாக ஒரு தெரு அழைக்கப்பட இருப்பது தமிழுக்கும், வள்ளுவருக்கும் கிடைத்த மிகப்பெரிய பெருமையாகக் கருதப்படுகிறது.