தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா திரிபான ஒமைக்ரான் தொற்று தற்போது உலகின் 106 நாடுகளில் பரவி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒமைக்ரான் தொற்றால் உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், ஒமைக்ரான் தொற்றால் இதுவரை பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் தல ஒருவர் என இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தொற்று வேகமாகப் பரவி வருவது உலக மக்களை மீண்டும் அச்சமடையச் செய்துள்ளது.
இந்நிலையில், உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் ஒமைக்ரான் தொற்று பரவும் என பிரபல தொழிலதிபர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். இவர் கொரோனா இரண்டாவது அலை மோசமாக இருக்கும் என முன்கூட்டியே கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பில் கேட்ஸ் தனது ட்விட்டரில், "நாம் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்த நிலையில் ஒமைக்ரான் தொற்று மிகவேகமாகப் பரவிவருகிறது. இது விரைவில் உலகின் அனைத்து நாடுகளுக்கும் பரவும்.
இந்த தொற்று எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது புரியாத புதிராகவே உள்ளது. டெல்டாவை விட வேகமாகப் பரவுகிறது ஒமைக்ரான். எனவே பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
ஒமைக்ரான் தொற்றின் பாதிப்பு மூன்று மாதங்களுக்கு மேல் இருக்கக் கூடும். 2022ம் ஆண்டு தொற்று நோய்க்காலம் முற்றிலும் முடிவடையக்கூடும். தொற்றின் காலம் விரைவில் முடிவுக்கு வரும்” என தெரிவித்துள்ளார்.