உலகம்

மனைவி மெலின்டாவை பிரிந்த பில்கேட்ஸ்.. அமெரிக்க சட்டத்தால் விவகாரத்து? - உண்மையான காரணம் என்ன?

பணக்காரர்களின் வாழ்க்கையை சாமானியர்களின் வாழ்க்கையைப் போல் எடை போட்டுவிட முடியுமா?

மனைவி மெலின்டாவை பிரிந்த பில்கேட்ஸ்.. அமெரிக்க சட்டத்தால் விவகாரத்து? - உண்மையான காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

மே மாதம் முதல் வாரம் உலகின் பெரும் பணக்காரரான பில் கேட்ஸ்ஸுக்கு மிக முக்கியமான ஒரு வேலை இருந்தது. மே 4ஆம் தேதி தனது ட்விட்டர் கணக்கில் ஒரு முக்கியமான செய்தியை பதிவிட்டார்.

‘பெருமளவு சிந்தனைக்கு பிறகும் எங்கள் உறவை சரி செய்ய கடும் முயற்சி எடுத்ததற்குப் பிறகும் எங்களின் திருமண உறவை முடித்துக் கொள்ளும் முடிவை எடுத்திருக்கிறோம். கடந்த 27 வருடங்களில் நாங்கள் மூன்று அற்புதமான குழந்தைகளை வளர்த்திருக்கிறோம். உலகெங்கும் வாழும் மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கென இயங்கும் அறக்கட்டளையை உருவாக்கியிருக்கிறோம். அந்த நோக்கத்தின் மீதான நம்பிக்கையை நாங்கள் தொடருவோம். அறக்கட்டளையிலும் ஒன்றாகப் பணிபுரிவோம். ஆனால் எங்கள் வாழ்க்கைகளின் அடுத்த கட்டங்களில் தம்பதிகளாக நாங்கள் தொடர முடியுமென்ற நம்பிக்கையை இழந்துவிட்டோம். இனி வரும் புது வாழ்வை நாங்கள் தொடர்வதற்கு தேவையான வெளியும் தனிமையும் எங்கள் குடும்பத்துக்கு கொடுக்க கேட்டுக் கொள்கிறேன்.’ என ஒரு செய்தி. அச்செய்தியை இருவருமே ஏற்றுக் கொண்ட விதத்தில் இருவரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்தன.

கோவிட் தொற்றுநோய் செய்திகளைப் பேசி அலுத்துப் போயிருந்த ஊடகங்களுக்கு பில் கேட்ஸ்ஸின் விவாகரத்து செய்தி அற்புதமான ஆர்வமூட்டும் செய்தியாக கிடைத்தது. அவற்றின் ஆர்வத்துக்கேற்ப அவர்களின் வாழ்க்கையிலும் பல செய்திகள் புதைந்துதான் கிடைக்கின்றன.

பில் கேட்ஸின் மனைவியின் பெயர் மெலிண்டா கேட்ஸ். 1964ம் ஆண்டில் பிறந்தவர். தந்தை அப்போதே வான்வெளி பொறியியலாளராக இருந்தார். தாய் குடும்பத்தை நிர்வகித்தார். மெலிண்டாவுக்கு ஓர் அக்காவும் இரண்டு தம்பிகளும் இருந்தனர். படிப்பில் சிறந்து விளங்கியவருக்கு சிறுவயதிலேயே கணினி அறிமுகமானது. கணினி விளையாட்டு மற்றும் மென்பொருள் உருவாக்கம் முதலியவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார். 1986ஆம் ஆண்டில் கணினி அறிவியலில் இளங்கலை முடித்தார். முதல் வேலை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் கிடைத்தது. யாருமே எதிர்பார்க்காதவரின் பார்வை மெலிண்டா கேட்ஸ்ஸின் மீது விழுந்தது. பில் கேட்ஸ்!

மனைவி மெலின்டாவை பிரிந்த பில்கேட்ஸ்.. அமெரிக்க சட்டத்தால் விவகாரத்து? - உண்மையான காரணம் என்ன?

உலகில் இருக்கும் எல்லா பெண்களை போலதான் பில் கேட்ஸ்ஸின் மனைவிக்கும் வாழ்க்கை வாய்த்தது. கணினி அறிவியல் படிப்பு படித்தவரின் வாழ்க்கை குடும்பத்துக்குள் முடங்கியது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திலிருந்து பதவி விலகிய பின் அவர் படித்த கல்லூரி அறக்கட்டளையின் ஒரு அறங்காவலராக 1996ஆம் ஆண்டிலிருந்து 2003ஆம் ஆண்டு வரை இருந்தார். மெலிண்டா கேட்ஸுக்கு தன் வாழ்க்கையை பற்றி மனதில் கொண்டிருந்த உறுத்தலின் காரணமாக பெயரளவில் பில் அண்ட் மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. பிறகு 2004ஆம் ஆண்டிலிருந்து க்ரகாம் ஹோல்டிங்ஸ் என்கிற நிறுவனத்தின் அறக்கட்டளையில் ஓர் அறங்காவலராக இருக்கிறார்.

பில்கேட்ஸ் என்கிற செல்வாக்கு நிறைந்த நபரின் மனைவியாக இருந்ததால் மெலிண்டா கேட்ஸ் என்கிற பெண் அடைந்த இழப்புகள் ஏராளம். அவற்றை அவர் மீட்பதற்கே கிட்டத்தட்ட 14 வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இவற்றை எல்லாம் தாண்டி பில் அண்ட் மெலிண்டா அறக்கட்டளையின் சார்பாக அவர் செய்த தொண்டுகளாலும் சமூக சேவைகளாலும் ஓரளவுக்கு அவருக்கான வாழ்க்கையை மீட்டுக் கொள்ள முடிந்தது. ஆனால் அந்த அறக்கட்டளைக்குள்ளும் பில் கேட்ஸ் தன்னுடைய வணிகத்தின் பேராசையை திணிக்க முயன்று பிரச்சினையான சம்பவங்களும் உண்டு.

பில் அண்ட் மெலிண்டா அறக்கட்டளை நிதி அளித்த ஒரு நிறுவனம் உற்பத்தி செய்த மருந்துகள் இந்தியாவின் பழங்குடி மக்கள் மீது செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்ட சம்பவங்களும் நடந்து பிரச்சினையாகின. அந்த வரிசையில்தான் கோவிட் தொற்றுக்கு உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளின் உரிமம் மூன்றாம் உலக நாடுகளுக்கு வழங்கப்படக் கூடாது என பில் கேட்ஸ் பேசிய விவகாரமும் அமைந்தது. சமூக சேவைக்கென தொடங்கப்பட்ட அறக்கட்டளையையும் வணிக லாபங்களை உருவாக்கும் நிறுவனமாக மாற்றும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது.

இத்தகைய சூழலில்தான் இருவரின் விவாகரத்துக்கான அறிவிப்பு வெளிவந்தது. எனினும் பணக்காரர்களின் வாழ்க்கையை சாமானியர்களின் வாழ்க்கையைப் போல் எடை போட்டுவிட முடியுமா?

மனைவி மெலின்டாவை பிரிந்த பில்கேட்ஸ்.. அமெரிக்க சட்டத்தால் விவகாரத்து? - உண்மையான காரணம் என்ன?

டொனால்ட் ட்ரம்ப்பின் ஆட்சி மாறி ஜோ பைடன் பதவியேற்ற சில மாதங்களில் முக்கியமான இரண்டு சட்ட வரைவுகள் முன்வைக்கப்பட்டன. ஒன்று, அமெரிக்க வேலைத்திட்ட வரைவு. இன்னொன்று அமெரிக்க குடும்பங்கள் திட்ட வரைவு. இவை இரண்டுமே முக்கியமான முக்கியமான வரி விதிப்புகளை முன்வைத்திருக்கின்றன. அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களாக சிலருக்கு மட்டும் விதிக்கப்பட்டிருக்கும் வரிகள் அவை.

அதிகமெல்லாம் ஒன்றுமில்லை. ஏற்கனவே இருந்த 37 % வருமான வரி விகிதத்திலிருந்து 39.6% வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. வெறும் இரண்டரை சதவிகிதம். ஆனால் இந்த இரண்டரை சதவிகிதமே பெரும் அளவுக்கான நிதியை கொண்டு வர முடியுமெனில் எந்தளவுக்கு பெரும் பணக்காரர்கள் அமெரிக்காவில் இருப்பார்கள் என ஊகித்துக் கொள்ளுங்கள்.

சரி, இந்த வரி விதிப்புக்கும் பில் கேட்ஸ் விவாகரத்துக்கும் என்ன சம்பந்தம்?

விவாகரத்து செய்கையில் சொத்துகள் கணவன் மற்றும் மனைவி ஆகியோருக்கு இடையில் பிரிக்கப்படுகிறது. எனவே வரி கட்ட வேண்டிய வரம்பு குறைகிறது. வரியின் அளவும் குறைந்துவிடுகிறது.

அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களாக இருந்தவர்களில் முக்கியமானவர்கள் இரண்டு பேர். அமேசான் நிறுவனத்தின் அதிபர் ஜெஃப் பெசோஸ் ஒருவர். பில் கேட்ஸ் இரண்டாமவர். ஜோ பைடன் கொண்டு வரும் வரி விதிப்பு அதிகமாக பாதிக்கவிருந்ததும் அவர்களைத்தான். அதற்கு பின்தான் பில் கேட்ஸ்ஸின் விவாகரத்து பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது. சுவாரஸ்யம் என்ன தெரியுமா? அமேசான் நிறுவன அதிபரான ஜெஃப் பெசோஸும் கடந்த ஜனவரி மாதத்தில் விவாகரத்து அறிவித்திருக்கிறார்.

ஜோ பைடன் கொண்டு வரும் வரி உயர்வால் பாதிக்கப்படும் இருவர் தொடர்ச்சியாக விவாகரத்து செய்வது யதேச்சையாக இருப்பதற்கான வாய்ப்பு குறைவுதான். ஏனெனில் உலகத்தையே சுரண்டிப் பணம் சேர்த்தவர்களின் வாழ்க்கையில் சேர்தலும் பிரிதலும் கூட லாபக் கணக்காக மட்டுமே இருக்க முடியும்!

banner

Related Stories

Related Stories