நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் பாகிஸ்தானைச் சேர்ந்த அசர் மாலிக் என்பவரை இன்று திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் பிரிட்டன் பர்மிங்காமில் எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது.
இந்த தகவலை மலாலா யூசுப்சாய் திருமண புகைப்படங்களை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். மேலும் அவரது ட்விட்டர் பதிவில், "இன்று என் வாழ்க்கையில் ஒரு பொன்னான நாள். அசரும் நானும் வாழ்க்கைக்குத் துணையாக இருக்க முடிவுசெய்துவிட்டோம்.
எங்கள் குடும்பத்தினருடன் பர்மிங்காமில் உள்ள வீட்டில் எளிமையான முறையில் எங்கள் திருமணம் நடைபெற்றது" எனத் தெரிவித்துள்ளார். இவரது இந்த ட்வீட்டை அடுத்து மலாலாவை திருமணம் செய்து கொண்ட அசர் மாலிக் யார் என பலரும் இணையத்தில் தேடிப் பார்த்துள்ளனர்.
பாகிஸ்தான் லாகூரில் தனது பள்ளி படிப்பை முடித்துள்ளார் அசர் மாலிக். மேலும் லாகூரில் உள்ள மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். தொழிலதிபரான இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பொது மேலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண் குழந்தைகள் கல்விக்காகப் போராடியதற்காக மலாலா மீது தாலிபான் பயங்கரவாதிகள் 2012ல் தாக்குதல் நடத்தினர். தலையில் குண்டு பாய்ந்த நிலையில், அவர் உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.