ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப்படை வெளியேறியதை அடுத்து தாலிபான்கள் நாட்டைக் கைப்பற்றியுள்ளனர். மேலும் பிரதமராக முல்லா முகமது ஹசனும், துணை பிரதமராக அப்துல் கனி பரதாரும் பதவி ஏற்றுள்ளனர்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்துள்ளதால் ஆப்கன் மக்கள் பீதியடைந்து நாட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள். ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதிலிருந்தே பெண்களையும், பத்திரிகையாளர்களையும், கலைஞர்களையும் அடித்து துன்புறுத்தி கொலை செய்து வருகிறார்கள் தாலிபான்கள்.
மேலும் பொதுமக்கள் தவறு செய்தால் அவர்களின் கை, கால்கள் வெட்டப்படும், கல்லால் அடித்து கொலை செய்யப்படுவார்கள் இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஆப்கானிஸ்தானின் சிறைத்துறைத் தலைவர் முல்லா நூருதின் துராவி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், குற்றம் செய்ததாகக் கூறி நான்கு பேரைக் தாலிபான்கள் சுட்டு கொலை செய்து அவர்களின் சடலத்தை வீதியில் தொங்க விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூர நிகழ்வு ஆப்கானிஸ்தான் ஹெராட் நகரில் நடந்துள்ளது. மேலும் இந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. இறந்தவர்களின் சடலத்தின் மீது "கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இனிமேல் இதுதான் கதி" என்று எழுதப்பட்டு ஒட்டப்பட்டுள்ளது. தாலிபான்கள் நான்கு பேரின் சடலங்களை வீதியில் தொங்கவிட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆட்சியிலிருந்தபோது இதேபோன்றுதான் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களைப் பொதுமக்கள் முன்னிலையில் கொலை செய்து அவர்களின் உடல்களை வீதியில் தொங்க விடுவதை வழக்கமாக வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.