ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவின் படைகள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், தனது ஆட்சியைக் காப்பாற்ற முடியாமல் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி நாட்டை வெளியேறிவிட்டார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றிவிட்டார்கள். இதனால் அந்நாட்டு மக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் விமான நிலையங்களில் குவிந்தனர்.
பேருந்தில் ஏறுவதைப் போல, விமானங்களின் பக்கவாட்டுப் பகுதிகளில் ஏறி, பறக்கும்போது கீழே விழுந்து உயிரைவிட்ட அவலமும் அறங்கேறியது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி பிரிட்டன் சென்ற பெண் ஒருவருக்கு விமானத்திலேயே குழந்தை பிறந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சோமன் நூரி என்கிற 26 வயதான அந்த பெண் காபூலில் இருந்து வெளியேறி துபாய் சென்றிருந்தார். பின்னர் அங்கிருந்து பிரிட்டனின் பர்மிங்ஹாம் நகரத்துக்கு மக்களை மீட்டு வரும் துருக்கி ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தார்,
அப்போது விமானத்திலேயே சோமன் நூரிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த விமானத்தில் மருத்துவர்கள் இல்லாததால், விமான பணியாளர்களே சோமன் நூரிக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.
விமானம் 30,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, சோமன் நூரி ஒரு அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அப்பெண்ணுக்கு ஹவா அல்லது ஆங்கிலத்தில் ஈவ் என பெயரிட்டுள்ளனர். தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக விமான நிறுவனம் கூறியுள்ளது.