ஆப்கானிஸ்தான் முழுவதையும் தாலிபான்கள் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. அங்கிருந்து வெளியாகும் ஒவ்வொரு தகவலும் உலக நாடுகள் முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சர் அகமது ஷா சாதத் என்பவர் ஜெர்மனியில் பீட்சா டெலிவரி பாயாக வேலை பார்த்து வருகிறார். இவர் சைக்கிளில் சென்று பீட்சா டெலிவரி செய்யும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஆப்கானிஸ்தானில் சாதத் 2018ம் ஆண்டு தகவல் தொடர்புத்துறை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். பின்னர் அதிபர் அஷ்ரப் கனியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக 2020ம் ஆண்டு அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதையடுத்து அவர் தனது குடும்பத்தாருடன் ஜெர்மனிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் பல்வேறு வேலைகள் தேடி கிடைக்கவில்லை. கையில் பணமும் இல்லாததால் ஒருகட்டத்தில் பீட்சா டெலிவரி பாயாக வேலைக்குச் சேர்ந்துள்ளார்.
இதுகுறித்து சாதத் கூறுகையில், "நான் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். ஜெர்மனியில் நான் பாதுகாப்பாக உணர்கிறேன். எனது குடும்பத்துடன் இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். பணத்தை மிச்சப்படுத்தி ஒரு ஜெர்மன் படிப்பைக் கற்க ஆசைப்படுகிறேன். எனது கனவு ஜெர்மன் தொலைத் தொடர்பு நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்பதே" எனத் தெரிவித்துள்ளார்.
தாலிபான்கள் ஜனநாயத்துக்கு விரோதமான முறையில் ஆப்கனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தபோது, மக்களைப் பற்றி கவலைப்படாமல், பணத்தை எடுத்துக் கொண்டு நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற அதிபருக்கு மத்தியில், முன்னாள் அமைச்சர் நேர்மையாக வேலை செய்து பணம் ஈட்டி வருவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.