மியான்மரில், பிப்ரவரி 1ம் தேதி முதல் இராணுவ ஆட்சி நடந்து வருகிறது. ஜனநாயக அரசைக் கவிழ்த்து இராணுவம் ஆட்சிக்கு வந்தது முதலே அந்த நாட்டு மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனநாயகத்தை மீட்டெடுக்கக் கோரும் மக்களின் போராட்டத்தை இராணுவம் அடக்குமுறையால் நசுக்கி வருகிறது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரே நாளில் 114 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தக் கொடூர சம்பவம் உலகளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து சர்வதேச நாடுகள் மியான்மர் இராணுவத்தை வன்மையாகக் கண்டித்து வருகின்றன.
இந்நிலையில், மியன்மர் இராணுவத்திற்கு அதானி குழுமம் 30 மில்லியன் டாலர் நிதி வழங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மியான்மர் நாட்டின் முக்கிய நகரமாக கருதப்படும் யாங்கோனி நகரத்தில், அதானி துறைமுகத்தை அமைப்பதற்காக, மியான்மர் பொருளாதார இராணுவத்திடம் 30 மில்லியன் டாலரை செலுத்தியுள்ளதாக ஆங்கில செய்தி நிறுவனமான ஏ.பி.சி தெரிவித்துள்ளது.
ஆனால், இதை அதானி குழுமம் மருத்திருந்தாலும், ஏ.பி.சி புகைப்படங்களை வெளியிட்டு உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. 2019ம் ஆண்டு அதானி துறைமுகங்களின் தலைமை நிர்வாகி கரண் அதானி, மியன்மரில் தற்போது நடைபெற்று வரும் இராணுவ ஆட்சிக்கு தலைமை தாங்கி வரும் சீனியர் ஜெனரல் மின் ஆங் ஹ்லேங்கை சந்தித்துப் பேசிய படம் தற்போது வெளிவந்துள்ளது.
ஏற்கனவே சீனியர் ஜெனரல் மின் ஆங் ஹ்லேங், ஹெயிலிங் உட்பட சில தளபதிகளுக்கு அமெரிக்காவின் மனித உரிமை ஆணையம் தடை வித்துள்ளது. அதேபோல், மியான்மர் எகனாமிக் ஹோல்டிங்ஸ் பப்ளிக் கம்பெனி லிமிடெட், மற்றும் மியான்மர் பொருளாதாரக் கூட்டுக்குழு நிறுவனத்திற்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை வித்துள்ளது.
இந்நிலையில், அதானி குழுமம் தனது துறைமுகத்தை விரிவுபடுத்துவதற்காக மியான்மர் பொருளாதாரக் கூட்டுக்குழு நிறுவனத்திற்கு 30 மில்லியன் டாலர் வழங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிதியை இவர்கள் சர்வதேச குற்றங்களுக்காகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது என அமெரிக்க மனித உரிமை வழக்கறிஞர் ராவன் அராஃப் தெரிவித்துள்ளார்.