கொரோனா பாதிப்பை அதிவேகமாக கட்டுப்படுத்திய நியூசிலாந்து அரசு, செப்டம்பர் மாதம் 19-ம் தேதி நியூசிலாந்தின் பொதுத்தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஒரு சில இடங்களில் மீண்டும் தொற்றுப்பாதிப்பு கண்டறிப்பட்டதால், தேர்தலை அக்டோபர் 17ம் தேதி நடத்துவதாக நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் அறிவித்தார்.
அதன்படி நேற்றைய தினம் கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் பொதுத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடைபெற்ற மாலையே முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில், நியூசிலாந்து பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான ஜெசிந்தா ஆர்டெனின் தொழிலாளர் கட்சி, மொத்தமுள்ள 120 இடங்களில் 64 இடங்களை கைப்பற்றி 49.2 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது.
இந்த தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் மகத்தான வெற்றி பெற்றதால், நியூசிலாந்தின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டெர்ன் இரண்டாவது முறையாகப் பதவி ஏற்க உள்ளார். ஜெசிந்தா ஆர்டெர்ன் வெற்றி பெற்றதற்கு உலக நாட்டு அதிபர்கள், பிரதமர்கள் மற்றும் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
உலகிலேயே இளம் வயது பிரதமராக இருப்பவர் நியூசிலாந்து பெண் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன். கொரோனா காலத்தில் இவர் எடுத்த துடிப்பான நடவடிக்கைக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்தது. அதனால், கொரோனா காலத்தில் பிரதமராக இருந்து ஜெசிந்தா ஆர்டெர்ன் எடுத்த சிறப்பான நடவடிக்கைக்காக மீண்டும் அவரது கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.