உலகில் பிரபல சுற்றுலாத் தளமான தாய்லாந்து, கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பிறகு கடும் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டில் மட்டும் தாய்லாந்தின் புக்கட் நகருக்கு ஒரு கோடி வெளிநாட்டுப் பயணிகள் சுற்றுலாவிற்காக வருகை தந்துள்ளனர். இந்த சர்வதேச சுற்றுலாப் பயணிகளை நம்பியே தாய்லாந்து நாட்டின் பொருளாதாரம் அமைந்துள்ளது.
இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாகக் கடந்த 7 மாதங்களாக எந்த வெளிநாட்டுப் பயணிகளையும் அனுமதிக்கமுடியவில்லை. எனவே தற்போது பயணிகளுக்கான தடையை நீக்கி மாதம் ஒரு குறிப்பிட்ட அளவிலான சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க உள்ளனர்.
மற்ற உலக நாடுகளை ஒப்பிடும்போது அந்நாட்டில் மொத்தமே 200 பேர் தான் கொரோனா தொற்று சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கொரானாவிற்கு 59 பேர் இறந்துள்ளனர். எனவே இந்தநிலையில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டால் இந்த தொற்று எண்ணிக்கை உயருமோ என்ற அச்சம் தாய்லாந்து மக்களிடம் உள்ளது.
எனவே தாய்லாந்தில் கொரோனா பரவலைத் தடுக்க ஒரு புதிய முயற்சியை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது. அந்த நாட்டில் உள்ள கடைகளில் முகத்தை ஸ்கேன் செய்யக்கூடிய தானியங்கி கதவு வைத்துள்ளனர். அந்த ஸ்கேனர் கதவு உள்ளே வருபவர்கள் முகக்கவசம் அணிந்திருக்கிறார்களா என ஸ்கேன் செய்து முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே கதவுகள் திறக்கிறது.
ஸ்கேனருடன் கூடிய தானியங்கி கதவும், உடல் வெப்பநிலையை 2 நிமிடத்தில் பரிசோதிக்கும் ஸ்கேனர்களும் பொருத்தியுள்ளனர். மாஸ்க் அணிந்திருந்தால் அவர்களுக்குக் கதவு திறக்கிறது. அணியாதவர்களுக்கு 'அனுமதி இல்லை' எனச் சொல்கிறது. இந்த வீடியோ தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.