புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்துவதில் மழைக் காடுகள் பெரும் பங்கினை வகிக்கின்றன. ஆனால், இந்தக் காடுகளில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு மட்டும் அதிகமுறை காட்டுத்தீ உருவாகியுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது இயற்கை நமக்குக் கொடுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கக்கூடும் என்றும் ஈக்குவடார் நாட்டின் பழங்குடியினர் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள காட்டில் கடந்த ஒரு மாதமாக எரிந்து வரும் காட்டுத்தீ உலக அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் மழைக்காடுகளில் கடும் காட்டுத்தீ உருவானது. அதனைத் தொடர்ந்து தற்போது கலிபோர்னியாவில் பரவி வரும் காட்டுத்தீயால், சுற்றுச்சூழலில் முன்பை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சூழலியாளர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்க அரசுக்கு சூழலியல் மேல் உள்ள அக்கறையின்மையால் ஒவ்வொரு ஆண்டும் கலிபோர்னியாவில், கோடைக்காலத்தின் போது காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாமல் போவதால் இந்தாண்டு கலிபோர்னியா காட்டுத்தீ மிகப்பெரிய பேரிடராக மாறியுள்ளது.
கடந்த மாதம் உருவான காட்டுத்தீ, அரசின் அலட்சியத்தாலும், துரித நடவடிக்கை எடுக்காததன் விளைவாலும் தற்போது வரை கட்டுக்குள் அடங்காமல் பற்றி எரிந்து வருகிறது. இதனால் கலிபோர்னியா மாகாணமே நிலைகுலைந்து காணப்படுகிறது.
இந்தக் காடுகளில் மட்டும் சுமார் 25 பெரிய காட்டுத்தீ கட்டுப்படுத்தப்படாமல் இன்னும் உயிர்ப்புடன் எரிந்துகொண்டிருக்கிறது. இதுதவிர நாள் ஒன்றுக்கு புதிதாக 60க்கும் மேற்பட்ட காட்டுத்தீ உருவாகிக்கொண்டிருக்கிறது.
இந்த காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டுவர சுமார் 17,000 தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இதனிடையே காட்டுத்தீயின் தாக்கம் அதிகமாக உள்ள நாபா பள்ளத்தாக்கு மற்றும் சொனோனா மாவட்டங்களில் பலத்த காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 28,000 வீடுகள் மற்றும் பிற கட்டிடங்கள் அச்சுறுத்தலில் உள்ளன.
அதுமட்டுமின்றி, காட்டுத்தீயால் சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான ஏக்கர் நிலம் எரிந்து சாம்பலாக்கியுள்ளது. இந்த காட்டுத்தீயில் 31 பேர் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காட்டுத்தீ காரணமாக கிட்டத்தட்ட 80,000 பேர் வரை வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறினர். அமெரிக்காவில் வரலாறு காணாத காட்டுத்தீ என இதனை சூழலியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.