குழந்தைகள் முகக்கவசம் அணிவது தொடர்பாக புதிய வழிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று உலக அளவில் அதிகரித்து வரும் நிலையில் இந்த வழிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த புதிய வழிமுறைகளில் 5 வயதிற்கு குறைவாக உள்ள குழந்தைகள் முகக் கவசம் அணியத் தேவையில்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. குழந்தையின் பாதுகாப்பு, அவர்களுடைய முழுமையான உடல்நலம் உள்ளிட்டவை கருத்தில் கொள்ளப்பட்டே இந்த வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 வயது முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளை பொறுத்தவரை அந்தக் குழந்தை வசிக்கும் பகுதியில் மிக அதிக அளவில் கொரோனா தொற்று இருந்தால் மட்டுமே அக்குழந்தைகள் முகக் கவசம் அணியவேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
12 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் கட்டாயமாக முகக் கவசம் அணியவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வளர்ந்த நபர் கடைபிடிக்கவேண்டிய அத்தனை நோய் வழிமுறைகளையும் 12 வயதுக்கு மேலான குழந்தைகள் கடைபிடிக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
புற்றுநோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும், வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகள் கட்டாயம் முகக் கவசம் அணிவதோடு பெற்றோரின் கண்காணிப்பும் இருக்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.