அன்றாட வாழ்வில் இணைய பயன்பாட்டின் பங்கு பெருமளவில் அதிகரித்துள்ளது. அதிலும், இந்த கொரோனாவால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் இணையத்திலேயே மூழ்கி கிடப்பவர்கள் பற்றிய பல்வேறு ஆய்வுகளும் வெளிவந்த வண்ணம் உள்ளது.
அதேநேரத்தில் அதிக நேரம் இணையத்தில் நேரம் செலவிடுவதால் சாதாரண நாட்களை காட்டிலும் இந்த கொரோனா காலத்தில் பாதுகாப்பு குறைபாடும் கூடவே அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக ஹேக்கர்களின் செயல்பாடுகளின் ஓங்கியிருக்கிறது.
இப்படி இருக்கையில், ஜூலை 15 ஆன நேற்று உலகின் பல்வேறு பிரபலங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதால் முடக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் உள்ளிட்ட பல தலைவர்கள், கோடீஸ்வரர்கள், பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
ஹேக் செய்யப்பட்ட பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளில் பிட்காயினுக்கான விளம்பரங்களை பரப்பும் வகையில் ட்வீட்கள் பதிவிடப்பட்டிருந்தன. அதில், கிரிப்டோ கரன்சிகளை நன்கொடையாக வழங்குமாறு குறிப்பிட்டதோடு, 1000 டாலர்கள் கொடுத்தால் அதனை இரட்டிப்பாக்கி 2000 டாலர்களாக அனுப்புவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் ட்விட்டர் கணக்கில் “கொரோனா காரணமாக என்னுடைய சமூகத்துக்கு எல்லாவற்றையும் திரும்ப வழங்கவிருக்கிறேன். எனக்கு அனுப்பப்பட்டுள்ள பிட்காயின்களை இரண்டு மடங்காக திரும்ப அனுப்பப் போகிறேன்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வாறு ஹேக் செய்யப்பட்டு பதிவிடப்பட்டிருந்த ட்வீட்கள் சில நிமிடங்களிலேயே நீக்கப்பட்டும்விட்டன.
இது தொடர்பாக விளக்கமளித்துள்ள ட்விட்டர் நிர்வாகம், “ட்விட்டர் கணக்குகளில் ஏற்பட்ட அசம்பாவித நிகழ்வுகள் குறித்த செய்தியை அறிந்தோம். இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து, நெட்டிசன்கள் பலர் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகளின் நிலை குறித்து மீம்ஸ்கள் மூலம் கிண்டலடித்து வருகின்றனர்.
மேலும், இந்த நிகழ்வின் மூலம் பல பிரபலங்கள் மத்தியில் ட்விட்டரின் பாதுகாப்பு குறித்து அச்சமடைந்துள்ளனர். ஏனெனில், ட்விட்டரில் பதிவிடப்படும் ஒவ்வொரு பதிவும் அதிகாரப்பூர்வமானதாக இருக்கும் என்ற நம்பிக்கை அனைத்து சமூக வலைதளவாசிகளிடமும் நிலவி வருகிறது. அவ்வாறு இருக்கையில் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது ட்விட்டர் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.