டிசம்பர் மாதம் தொடங்கி கடந்த 7 மாதங்களாக கொரோனா நோய் தொற்று உலகையே வதைத்து வருகிறது. உயிரிழப்புகள் அதிகம் கொண்ட நாடாக அமெரிக்க முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 1,34,000 பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனா நோய் குறித்து தன் நாட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய டிரம்ப், இது ஒரு சாதாரண ஃப்ளூ நோய் என்றார். ஊரடங்கு தேவையில்லை என்றார். மிக அவசியமாக கருதப்படும் மாஸ்க் அணிய மாட்டேன் என அடம் பிடித்தார். பத்திரிகையாளர் சந்திப்பின் போது கூட மாஸ்க் அணியாமலே வெளியே வந்தார்.
7 மாதங்களுக்குப் பிறகு ஒரு வழியாக டிரம்புக்கு ஞானோதயம் பிறந்திருக்கிறது. முதல் முறையாக மாஸ்க் அணிந்து வெளியே வந்திருக்கிறார். ராணுவ மருத்துவமனை ஒன்றில் காயமடைந்த வீரர்களை சந்திக்கச் சென்ற போதே இது நடந்திருக்கிறது.
இப்போதாவது திருந்தினாரே என்று மக்கள் நினைத்தால் அதிலும் ட்விஸ்ட் வைக்கிறார். தான் கொரோனாவுக்காக மாஸ்க் அணியவில்லை. மாஸ்க் அணிவது தனிப்பட்ட விருப்பம். மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் நடந்திருக்கலாம், அதனால் பொதுவாக மாஸ்க் போட்டுக் கொள்வது நல்லது என்று தெரிவித்துள்ளார். இப்போதும், கூட்டத்தில், தனிமனித இடைவெளி இல்லாத இடத்தில் மட்டுமே மாஸ்க் அணிவேன் என்று அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் அதிபரே இப்படி அலட்சியமாக இருப்பது நாட்டு மக்களுக்கு தவறான உதரணமே.!