சீனாவுக்கு அருகாமையில் இருந்தாலும், 14 கோடி மக்கள்தொகையைக் கொண்ட உலகின் மிகப்பெரிய நாடான ரஷ்யா, கொரோனா வைரஸ் பரவலை பெருமளவில் கட்டுப்படுத்தியுள்ளது.
சீனாவின் வூஹான் நகரைப் பிறப்பிடமாகக் கொண்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஈரான், தென் கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் 4 லட்சத்தை நெருங்கி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
உலகின் மிகப்பெரிய நாடான ரஷ்யாவில் கொரோனா வைரஸால் 438 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் ஒரு உயிரிழப்பையும் சந்திக்காத நாடாக ரஷ்யா இருக்கிறது. இத்தனைக்கும் சீனாவுடன் 4,200 கி.மீ எல்லைப் பரப்பைக் கொண்டுள்ளது ரஷ்யா.
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைவாக இருப்பதற்குக் காரணம் அங்கு கண்காணிப்பும் பரிசோதனையும் தீவிரமாகக் கடைபிடிக்கப்பட்டதுதான். வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து திரும்பியவர்கள் 14 நாட்களுக்குக் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு ஆளாக்கப்பட்டனர்.
கொரோனா அறிகுறி இருப்பவர்கள் வெளியே வந்தால் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. வெளிநாட்டுப் பயணிகள் நாடு கடத்தப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கொரோனா பாதிப்பைக் கண்காணிக்க உயர்தர மையம் ஒன்றை அமைப்பதாக அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்திருந்தார். கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து வருவோரை தனிமைப்படுத்தல் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டது.
முகத்தைக் கண்டறியும் கேமராக்கள் மூலம் பலரும் கண்காணிக்கப்பட்டனர். இதற்காக சுமார் 1 லட்சம் கேமராக்கள் செயற்கை நுண்ணறிவு வசதியுடன் இணைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ரஷ்யாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி டாக்டர் மெலிடா வுஜ்னோவிக் கூறுகையில், “ரஷ்யா ஜனவரி இறுதியில் தனது கெடுபிடிகளை தொடங்கிவிட்டது. சோதனையைத் தாண்டி ரஷ்யா பரந்த அளவிலான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. WHO அறிவுறுத்திய வழிமுறைகளின்படி சோதனைகளும், தனிமைப்படுத்தலும் மேற்கொள்ளப்பட்டன” எனத் தெரிவித்துள்ளார்.
இது ஒருபுறமிருக்க, ரஷ்யா கொரோனா பாதிப்பு தொடர்பான எண்ணிக்கையை மறைத்திருக்கலாம் எனவும் ஊடகங்கள் சந்தேகம் கிளப்புகின்றன.