அரபு குடியரசு மத்திய கிழக்கில் அமைந்துள்ள போர்ச் சூழல் மிகுந்த நாடு சிரியா. இது மேற்கில் லெபனான் நாட்டையும், தென்மேற்கில் இஸ்ரேலையும், கிழக்கில் ஈராக்கையும், வடக்கே துருக்கியையும் எல்லையாகக் கொண்டுள்ளது.
சிரியாவின் துருக்கி, ஈரான், ஈராக் போன்ற நாடுகளின் எல்லைப் பகுதிகளில் குர்திஷ் இன மக்கள் வாழ்கின்றனர். தற்போது இவர்களை ஒழித்துக்கட்ட துருக்கி தன் இராணுவ பலத்தைப் பயன்படுத்தி சிரியா மீது பெரும் போர் தொடுத்து வருகிறது.
அதுமட்டுமின்றி, தற்போது அங்குள்ள சில நகரங்களை துருக்கி இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அந்த நகரங்களை அவர்களிடமிருந்து மீட்க குர்திஷ் போராளிகள் சண்டையிட்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் மோதி அப்பாவி மக்கள் 6 பேர் கொல்லப்பட்டனர்.
பல ஆண்டுகளாக நீடித்துவரும் போரால் அப்பகுதி மக்கள் தினமும் அச்சத்துடன் நாட்களைக் கடத்தி வருகின்றனர். தொடர் தாக்குதல் காரணமாக வீடின்றி நகரைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக சாராகுஃப் பகுதியில் உள்ள மக்களை அந்நாட்டு இராணுவப் படை வலுக்கட்டாயமாக வெறியேற்றி வருகிறது.
அந்தவகையில் அப்துல்லா முகமது என்பவரும் வெளியேற்றப்பட்டு தனது உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். அப்படி இருந்தும் அவர் இருக்கும் பகுதியின் அருகில் இரு இராணுவ படைகளுக்குமிடையே சண்டை நடைபெற்று வருகிறது.
அப்பகுதியில், குண்டு சத்தம் கேட்டு குழந்தைகள் மனரீதியாக மிகுந்த பாதிப்பை அடைந்துள்ளதால் அவர்களை குண்டு சத்தத்திற்கு பழக்கப்படுத்த அவர்களது பெற்றோர் பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி அப்துல்லா முகமது தனது 4 வயது மகளுக்கு குண்டு சத்தம் கேட்டால் சிரிக்கும்படி கற்றுக்கொடுக்கிறார். அப்படி குண்டு விழும் சத்தம் கேட்டால் சிரிக்கவேண்டும் என சொல்லிக் கொடுத்தபிறகு அந்த குழந்தையும் தந்தை சொல்வதுபோல, பயமின்றிச் சிரிக்கிறது.
இந்த நிகழ்வை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார் அப்துல்லா. அந்த வீடியோவில் என்ன சத்தம் கேட்கிறது? விமானமா? வெடிகுண்டா? என மகளிடம் அவர் கேட்கிறார்.
அதற்கு அவரது மகள், குண்டு என்று சொன்னதும் குண்டுச் சத்தம் கேட்கிறது. உடனே அப்பாவும் மகளும் வாய்விட்டுச் சிரிக்கிறார்கள். இந்தக் காட்சி காண்பவரை வேதனைப்படுத்துகிறது. அதிகார வர்க்கத்தின் கோரப் பசி அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பது தொடர்கதையாகி வருவதற்கு நிகழ் சாட்சி சிரியா.