ஆப்பிரிக்காவின் பெரிய தேசம் என அழைக்கப்படும் சூடான் நாட்டில் உள்நாட்டுப் போர் காரணமாக உற்பத்தி குறைந்து பணவீக்கம் கட்டுப்பாடற்று அதிகரித்துள்ளது.
சூடான் பண மதிப்பான பவுண்டு மதிப்பிழந்ததால் அந்நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்குச் சென்றுள்ளது. இதனால் நாட்டின் நிலைமை மோசமாகி கோதுமை போன்ற அத்தியாவசிய உணவுப்பொருட்களை கூட இறக்குமதி செய்ய முடியாமல் அரசாங்கம் நிலைதடுமாறியது.
குறிப்பாக, உள்ள சரிபாதி ஜனத்தொகை போதுமான உணவின்றி தவித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை ஏற்கெனவே தெரிவித்துள்ளது. மேலும், தீவிரவாத இயக்கங்கள் காரணமாக பொருளாதாரத் தடைகளுக்கு சூடான் உள்ளானது.
இந்நிலையில், மக்களைப் பாதுகாக்க முடியாமல் திணறிவரும் அரசு, வனவிலங்குகளை கேட்பாரற்று விட்டுள்ளது. சூடானில் உள்ள வனவிலங்குகள் பெரும்பாலானவற்றை காட்டுப்பகுதிகளுக்கு அனுப்பிவிட்டனர்.
ஆனால் சூடானில் உள்ள அல் குரேஷி வனவிலங்குப் பூங்காவில் பசியின் காரணமாக எலும்பும் தோலுமாக, பார்ப்பதற்கே பரிதாபமாக நிலையில் கூண்டில் அடைக்கப்பட்டுள்ளன. போதுமான உணவு வழங்காததாலும், ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சிங்கங்களுக்கு மருத்து இல்லாமலும் சிரமப்படுவதாக பூங்கா ஊழியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிங்கத்தின் பரிதாப நிலைமையை புகைப்படம் எடுத்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பூங்காவில் உள்ள வனவிலங்குகளுக்கு உதவ உலக நாட்டு மக்கள் முன்வர வேண்டும் என #SudanAnimalRescue ஹாஸ்டேக் மூலம் கோரிக்கை வைத்துள்ளன. இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.