கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை கடந்த 2015ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இவரின் தலைமையின் கூகுள் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான 'Alphabet' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கூகுள் நிறுவனத்தை நிறுவியவர்களாகிய லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரைன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என்ற பொறுப்புடன் கூகுளின் தாய் நிறுவனமான Alphabet நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளது.
ஆல்பபெட் நிறுவனத்தின் சி.இ.ஓ ஆக நியமிக்கப்பட்டது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுந்தர் பிச்சை, ''தொழில்நுட்பத்தின் மூலம் பெரிய சவால்களைச் சமாளிப்பதில் ஆல்பபெட் நீண்டகால கவனம் செலுத்துவது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். லாரி பேஜ் மற்றும் செர்ஜிக்கு எனது நன்றிகள்” எனத் தெரிவித்துள்ளார்.
2015ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆல்பபெட் நிறுவனம் தானியங்கி கார், ஸ்மார்ட் சிட்டி முதலிய திட்டங்ளைச் செய்து வருகிறது. Alphabet நிறுவனத்தின் சி.இ.ஓ ஆக அறிவிக்கப்பட்டுள்ள சுந்தர் பிச்சைக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.